உணமையை உரக்கக் கூறினார் விக்கிரமபாகு; ஓரளவு ஒப்புக்கொண்டார் வாசுதேவ 

வந்தேறிகளான தமிழர்கள் வடக்குக்கு எப்படி உரிமை கோருவது என எல்லாவல மேத்தானந்த தேரோ கடந்த 2012ஆம் ஆண்டு கடும் இனவாதத்தோடு கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன தேரருக்கு சவால் விடுத்தார். அதாவது ”இலங்கைத் தீவு தமிழர்களுக்குரிய தேசம் என்பதை உரிய ஆதாரங்களுடன் நிரூபித்துக் காட்டுவேன். முதுகெலும்பிருந்தால் தேரர் விவாதத்துக்கு வரத் தயாரா?” என வெளிப்படையாகவேர சவால் விடுத்திருந்தார்.

அதன்பின் தற்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பொதுஜன பெரமுனவின் வேட்பாளருமான வாசுதேவ நாணயக்கார தமிழரின் பூர்விகம் பற்றிய உண்மை நிலையை பகுதியளவில் ஏற்றுக்கொண்டு வெளிப்படுத்தியுள்ளார்.

”வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் தமிழர்களின் பூர்வீக பிரதேசம் அல்ல என தொல்பொருள் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர் குறிப்பிட்டுள்ள கருத்து முற்றிலும் தவறானது” என தெரிவித்துள்ளார்

செயலணியின் நோக்கம் தொல்பொருட்களை பாதுகாப்பதே தவிர முரண்பாடுகளை தோற்றுவிப்பது அல்ல எனவும், இது தொடர்பில் செயலணியின் உறுப்பினர்களின் செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதியிடம் தனிப்பட்ட முறையில் பேசவுள்ளேன்.

அரசாங்கத்தின் கொள்கைக்கு அமையவே செயலணிகள் செயற்பட வேண்டும் என வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஒரு பிரதேசத்தில் எந்த இனத்தவர்கள் அதிகளவில் வாழ்கின்றார்களோ அங்கு அந்த இனமே பெரும்பான்மையினமாக கருதப்படும். தெற்கில் சிங்களவர்கள் அதிகமாக வாழ்கின்றமையினால் அம்மாகாணம் பெரும்பான்மையினத்தவர்கள் உரிமைக் கொண்டாடுகிறார்கள் அதேபோல தான் வடக்கு மற்றும் கிழக்கிலும்.

வடக்கில் தமிழ் மக்கள் வரலாற்று காலம் தொடக்கம் வாழ்ந்துள்ளமைக்கான ஆதாரங்கள் மத தலங்களின் ஊடாகவும், மத வழிப்பாடுகளுடனும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.இவ்வாறான தன்மையே கிழக்கிலும் காணப்படுகிறது.

இலங்கை பல்லின சமூகம் வாழும் நாடு அனைத்து இன மக்களின் உரிமை மற்றும் கலாசாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

தமிழ் மக்களின் பூர்வீகம் வடக்கு மற்றும் கிழக்கு என்பது அனைவரும் அறிந்த விடயமே. தொல்பொருள் தொடர்பில் செயலணி நியமிக்கப்பட்டதன் நோக்கம் என்ன என்பதை செயலணயின் உறுப்பினர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார்.