பொன்சேகா மீது எதற்காக போர்க்குற்றச்சாட்டில்லை : மஹிந்த தரப்பினர் கேள்வி

சரத் பொன்சேகாவைத் தவிர ஏனைய படைத்தளபதிகளுக்கு போர்க்குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. பயணத் தடைகள் விதிக்கப்படுகின்றன. ஆனால் பொன்சேகாவுக்கு எதிராக ஏன் போர்க்குற்றச்சாட்டுகள் இல்லை? இது பற்றி நாட்டு மக்கள் சிந்திக்க வேண்டும் என்று மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளரான சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இறுதிப்போரை முடிப்பதற்கு முன்னர் மஹிந்த ராஜபக்சவால் போர் நிறுத்தம் வழங்கப்பட்டது என சரத்பொன்சேகா கூறி வருகின்றார். இது பொய்யான அறிவிப்பாகும். இவ்வாறு போர் முடிவுக்கு வரப்போகின்றது என்பது தனக்குத் தெரிந்திருக்குமானால் முள்ளிவாய்க்கால் போர் நடக்கும் போது பொன்சேகா ஏன் சீனா சென்றார்?

ஆயுதம் கொள்வனவு செய்வதற்காகவே அவர் அங்கு சென்றிருந்தார். போர் முடியப்போகின்றது என்பது உறுதியாக தெரிந்திருந்தால் நாட்டிலேயே இருந்திருக்கலாம் தானே? போர் முடியும் என அவர் நினைக்கவில்லை. அவ்வாறு எண்ணி இருந்தால் அவர் நாட்டில் இருக்கவேண்டும். ஏன் சீனா சென்றார் என்பது பற்றி அவர் தெளிவுபடுத்த வேண்டும். படையினரைக் காட்டிக்கொடுத்ததாலேயே பொன்சேகாவுக்கு ஐரோப்பிய நாடுகளால் பயணத்தடை விதிக்கவில்லை. போர்க்குற்றச்சாட்டும் முன்வைக்கப்படவில்லை என்றார்.