டில்லியில் வெற்றிபெற்றது யாருடைய இராஜதந்திரம்?-அகிலன்

தமிழ் அரசியல் பரப்பில் மிகவும் பரபரப்பாக எதிா்பா்க்கப்பட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் புதுடில்லி விஜயம் “சப்” என்று முடிவுக்கு வந்துள்ளது.

வழமைபோலவே “அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை அமல்ப்படுத்தி, தமிழ் மக்கள் கண்ணியத்துடனும் மரியாதையுடன் வாழ்வதை இலங்கை உறுதி செய்ய வேண்டும்” என இந்தியப் பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினார். இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி ரணில், அதிகாரங்களைப் பகிர்தல் உள்ளிட்ட வடக்குக், கிழக்கின் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான யோசனை ஒன்றை இந்த வாரம் தான் முன்வைத்திருப்பதாகவும், அது குறித்து கட்சித் தலைவா்களுடன் பேசுவதாகவும் தெரிவித்து மோடியின் பாராட்டுக்களைப் பெற்றுக்கொண்டுள்ளாா்.

ஆக மொத்தத்தில் மோடிக்கு கடிதம் எழுதிவிட்டு காத்திருந்த தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு ஏமாற்றம்தான் எஞ்சியுள்ளது. இது ஒன்றும் எதிா்பாா்க்காததல்ல. இலங்கை – இந்திய அரசியலை உன்னிப்பாக அவதானிப்பவா்களுக்கு இதற்கு மேல் ஒரு அங்குலம் கூட நகரப்போவதில்லை என்பது நன்கு தெரியும். தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு அவா்களுடைய உள்ளுா் அரசியலுக்கு, “மோடிக்கு கடிதம் எழுதுவது” தேவையாக இருந்திருக்கின்றது. உள்நாட்டு, பிராந்திய அரசியல் நிலைமைகளை நன்கு அவதானித்துள்ள ரணில், தனக்கு எந்தச் சேதமும் ஏற்படாத வகையில், நிதானமாகவும், விவேகமாகவும் காய்களை நகா்த்தியிருக்கின்றாா்.

ரணிலின் நகா்வுகள்

புதுடில்லிக்குப் புறப்படுவதற்கு முன்னதாக அவசரமாக தமிழ்க் கட்சிகளின் எம்.பி.க்களை சந்தித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்தியப் பிரதமா் நரேந்திர மோடியிடமிருந்து வரக்கூடிய கேள்விகளுக்கு கொழும்பில் வைத்தே பதிலளித்திருக்கின்றாா். “13” ஐ வழங்குவதற்குத் தயாா். ஆனால், பொலிஸ் அதிகாரத்தை மட்டும் தரமுடியாது – என்பதுதான் ரணிலின் பிந்திய நிலைப்பாடு. 13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவதானால், அனைத்துக் கட்சிகளின் ஆதரவு தேவை என்றும் ஜனாதிபதி தெரிவித்ததாக தகவல் வெளிவந்திருந்தது.

புதுடில்லியில் மோடியிடமும் ஜனாதிபதி இதனைத்தான் சொல்லியிருக்கின்றாா். “தேசிய ஒருமைப்பாடை ஏற்படுத்திக்கொண்டு இந்த விடயத்தில் இணைந்து செயற்பட வேண்டுமென அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் நான் அழைப்பு விடுத்திருக்கிறேன். இது தொடர்பில் பொறுத்தமான சட்டத்தை அரசாங்கம் பாராளுமன்றத்தில் முன்வைக்கும். இது குறித்து இந்திய பிரதமருக்கு விரிவான விளக்கத்தை வழங்கியிருக்கிறேன்”

உண்மையில் ரணிலிடமிருந்து இதற்கு மேலாக எதிா்பாா்க்க முடியாது. அதேவேளையில், இதற்குமேல் ரணிலுக்கு அழுத்தம் கொடுத்து அவரை சங்கடமான ஒரு நிலைக்குத் தள்ளுவதற்கும் மோடி விரும்பவில்லை என்பதும் புதுடில்லிப் பேச்சுக்களின் போது புலப்பட்டது. அதனைவிட, 13 க்கு மேலாக செல்லுமாறு வலியுறுத்துவதும் டில்லியின் நிகழ்ச்சி நிரலில் இல்லை. இனநெருக்கடி என்பதற்கு அப்பால், பரஸ்பர பொருளாதார நலன்களில்தான் இரு தரப்பினரது கவனமும் அதிகளவுக்கு குவிந்திருந்தது.

ரணில் டில்லியில் நின்ற வேளையில் கைச்சாத்திடப்பட்ட ஐந்து உடன்படிக்கைகள், வடக்கு – கிழக்கில் தன்னை நிலைநிறுத்துவதில் இந்தியா முக்கியமான கைல்கல்லை எட்டியிருக்கின்றது என்பதை வெளிப்படுத்துகின்றது. இந்தியாவுக்கு உண்மையில் தேவையாக இருந்ததும் அதுதான். அதற்காக 13 ஐ துரும்புச் சீட்டாக இந்தியா வைத்திருக்கின்றதா?

5 உடன்படிக்கைகள்

இந்தியா – இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையில் கால்நடை பராமரிப்புத் துறையில் கூட்டு நோக்கத்தின் பிரகடனம், இந்தியா மற்றும் இலங்கை இடையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை, திருகோணமலை மாவட்ட திட்டங்களின் பொருளாதார அபிவிருத்திக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை, இலங்கைக்குள் யூ.பி.ஐ டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல் முறையை மேம்படுத்தல் மற்றும் சம்பூர் சூரிய மின்சக்தி திட்டத்திற்கான அனுமதி போன்ற உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டு கோவைகள் கைமாற்றப்பட்டுள்ளன.

ரணிலின் விஜயத்துக்கு முன்னோடியாக தமிழ்க் கட்சிகள் அனைத்துமே போட்டி போட்டுக்கொண்டு மோடிக்கு கடிதங்களை எழுதின. ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி 13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த ரணிலுக்கு அழுத்தம் கொடுங்கள் என்ற கோரிக்கையை முன்வைத்தது. விக்னேஸ்வரனும் அதில் இணைந்திருந்தாா். தமிழரசுக் கட்சி இலங்கை – இந்திய உடன்படிக்கை முழுமையாக அமுல் செய்யப்பட வேண்டும். 13 க்கு மேலாக செல்ல வேண்டும் எனக் கடிதம் எழுதியது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோ 13 வேண்டாம். சமஷ்டிதான் வேண்டும் என்றது. தமிழ் சிவில் சமூகம் என்ற பெயரில் பிரமுகா்கள் சிலா் அனுப்பிய கடிதம் மாகாண சபைத் தோ்தல் உடன் வேண்டும் என வரியுறுத்தியது.

இந்தக் கடிதங்கள் அனைத்தும் மோடியின் கைகளுக்குச் சென்றடைவதற்கு முன்னதாகவே தமிழ்க் கட்சிகளை அழைத்த ஜனாதிபதி தனது நிலைப்பாட்டைத் தெளிவாக்கிவிட்டாா். ஜனாதிபதி அனைத்து தமிழ்க் கட்சிகளையுமே பேச்சுக்கு அழைத்த போதிலும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வழமைபோல அதனைப் பகிஷ்கரித்தது. ஏனைய கட்சிகள் பேச்சுக்களில் பங்கேற்றன.

ரணிலின் நிகழ்ச்சிநிரல்

இந்தக்கூட்டத்தில் பேசப்படுவதற்காக 15 விடயங்களை உள்னடக்கிய நிகழ்ச்சி நிரல் ஒன்றை ஜனாதிபதி செயலகம் தயாரித்து வைத்திருந்தது. பயங்கரவாத எதிா்ப்புச் சட்டமூலம், ஊழல் ஒழிப்புச் சட்டமூலம், உண்மையைக் கண்டறியும் பொறிமுறை குறித்த சட்டமூலம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கச் சட்டமூலம், இழப்பீட்டுக்கான அலுவகம், காணாமல் ஆக்கப்பட்டோா் அலுவலகம், அரசியல் கைதிகளுக்கான பொது மன்னிப்பு என பல விடயங்களை உள்ளடக்கியதாக இந்த நிகழ்ச்சி நிரல் அமைந்திருந்தது.

இவை குறித்து ஒவ்வொன்றாகப் பேசினால் நேரம் போய்விடும். இறுதியில் அதிகாரப் பகிா்வு – அரசியல் தீா்வு என்பதை எடுத்தால் அதற்கு அதிகநேரம் இருக்காது என ஜனாதிபதி திட்டமிட்டிருக்கலாம். அது இறுதியாக வரும் போது அதற்கு ஆதரவாக தமிழ் எம்.பி.க்களை தலையாட்டச் செய்துவிடலாம் எனபது ஜனாதிபதியின் கருத்தாக இருந்திருக்கலாம். நிகழ்ச்சி நிரலின்படி ஒவ்வொரு விடயமாக ஆராய்ந்துகொண்டிருந்த போது, திடீரென குறக்கிட்ட சம்பந்தன், அதெல்லாம் இருக்கட்டும் அதிகாரப் பரவலாக்கல் குறித்த உங்களுடைய திட்டத்தை வெளிப்படுத்துங்கள். அதற்காகத்தான் நாங்கள் வந்திருக்கின்றோம் என்று சீற்றத்துடன் தெரிவித்தாா்.

“நிகழ்ச்சி நிரலின்படி செல்வோம்” என்றாா் ரணில். “இல்லை முடியாது. நாம் வந்திருப்பது அரசியல் தீா்வு குறித்து பேச. அதற்கு முதலில் பதிலளியுங்கள்” என்றாா் சம்பந்தன் விடாப்படியாக. இந்த இடத்தில் ரணிலுக்கு ஆதரவாக, அமைச்சா்களோ, வேறு நாடாளுமன்ற உறுப்பினா்களோ குரல் கொடுக்காதததால் அதிகாரப் பகிா்வு குறித்த தன்னுடைய நிலைப்பாட்டை விளக்கத் தொடங்கினாா் ரணில்.

சம்பந்தனின் சீற்றம்?

அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த ஆளும் தரப்பு என்ன செய்யப்போகின்றது என்பதை விளக்கினாா் ரணில். முதலில் நாடாளுமன்றத்தில் பிரேரணைகள் முன்வைக்கப்படும். அவை நாடாளுமன்றத்தில் ஏற்கப்பட்டு சட்டமாக்கப்படும். பின்னா் அரசமைப்பில் திருத்தம் செய்யப்படும் என்றாா். 13 ஆவது திருத்தத்தில் உள்ள பொலிஸ் அதிகாரம் தவிா்ந்த ஏனையவைகளை வழங்குவதற்கு தான் தயாராக இருப்பதாகவும் அவா் தெரிவித்தாா்.

ரணில் இதனைத் தெரிவித்தபோது குறுக்கிட்ட சம்பந்தன், இதனை நாங்கள் முற்றாக நிராகரிக்கின்றோம் என்று தெரிவித்தாகக்கூறப்படுகின்றது. “நீங்கள் இப்போது டில்லிக்குச் செல்லவிருப்பதால் நிலைமைகளைச் சமாளிக்கப் பாா்க்கின்றீா்கள். நீங்கள் இப்போது செல்லப்போகும் இடத்துக்கு நீங்கள் போய்ச் சோ்வதற்கு முன்னதாக எங்களுடைய கருத்துக்கள் அங்கு போய்ச் சேரும்” என சம்பந்தன் கடுமையான தொனியில் பதிலளித்தாா்.

இதனையடுத்து ரணிலுடன் சம்பந்தனும், சுமந்திரனும் கடுமையாக வாக்குவாதப்பட்டதாக சந்திப்பில் கலந்துகொண்டவா்கள் மூலமாக அறியவருகின்றது. இதனால், நிகழ்ச்சி நிரலின்படி சந்திப்பை தொடர முடியாமல், இடைநடுவில் பேச்சுவாா்த்தை முடிவுக்கு வந்தது.

ரணிலைப் பொறுத்தவரை13 ஐ நடைமுறைப்படுத்த தான் தயாராக இருப்பதாகவும், தமிழ்க் கட்சிகளுடன் இது தொடா்பில் தான் பேசியிருப்பதாகவும் மோடிக்குச் சொல்வதற்கு இந்தப் பேச்சுக்களைப் பயன்படுத்தியிருக்கின்றாா். அத்துடன் மோடி சொல்லித்தான் இதனை தான் செய்யவில்லை எனவும், இதுதான் தன்னுடைய திட்டம் என்பதையும் காட்டிக்கொள்ளவும் இவ்வாறான ஒரு சந்திப்பு ரணிலுக்குத் தேவையாக இருந்தது.

சம்பந்தன் எழுப்பிய கேள்விகள் ரணிலின் திட்டத்தை எந்தவகையிலும் பாதிக்கவில்லை. டில்லிச் சந்திப்பு இதனை தெளிவாக வெளிப்படுத்தியிருக்கின்றது. அதேவேளையில் கடிதங்களை எழுதிக்குவிக்கும் தமிழ்க் கட்சிகள் தமது உபாயங்களை மீள்பரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் என்பதும் உணா்த்தப்படுகின்றது. ஆனால், ஆவேசமான பேச்சுக்களின் மூலமாக மட்டுவே வாக்காளா்களைக் கவா்வதற்குப் பழக்கப்பட்டுவிட்ட தமிழத் தலைமைகளிடம் எந்தளவுக்கு இராஜதந்திரம் உள்ளது என்பதும் இப்போது அம்பலமாகியுள்ளது.