இலங்கைக்கு WHO உதவி

உலக உணவுத்திட்டத்தினால் அமெரிக்க நிதியுதவியின் ஊடாகக் கொள்வனவு செய்யப்பட்ட அத்தியாவசியமான நிவாரணப்பொருட்கள் பாதுகாப்பு அமைச்சின்கீழ் இயங்கும் அனர்த்த முகாமைத்துவப்பிரிவிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

‘டித்வா’ சூறாவளி காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் பல நூற்றக்கணக்கானோர் பலியாகியிருப்பதுடன், இலட்சக்கணக்கானோர் தமது இருப்பிடங்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இலங்கைக்கு சர்வதேச நாடுகள், அரச சார்பற்ற அமைப்புக்கள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் உதவிகிளை வழங்கிவருகின்றனர்.

இந்நிலையில் மிகமோசமான மனிதப்பேரவலத்துக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கை மக்களுக்கு அவசியமான உடனடி நிவாரண உதவிகளுக்குப் பங்களிப்புச்செய்யும் வகையில் உள்நாட்டு முகவரமைப்புக்கள் ஊடாக 2 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்குவதாக அமெரிக்கா ஏற்கனவே அறிவித்திருந்தது.

அந்நிதியின் ஊடாகக் கொள்வனவு செய்யப்பட்ட சமையல் உபகரணங்கள், குடிநீர் தாங்கிகள், டீசல் ஜெனரேட்டர்கள், கூடாரங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய உடனடி நிவாரணப்பொருட்களை பாதுகாப்பு அமைச்சின்கீழ் இயங்கும் அனர்த்த முகாமைத்துவப்பிரிவிடம் கையளித்திருப்பதாக கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முகவரமைப்பான உலக உணவுத்திட்டம் தெரிவித்துள்ளது.

அதேவேளை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சகல குடும்பங்களுடனும் தாம் உடன்நிற்பதாகத் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித்திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி அசூஸா குபோட்டா, இயற்கை அனர்த்தத்தின் விளைவாக இலங்கையின் 25 மாவட்டங்களும் பாதிக்கப்படுவது இதுவே முதல்முறை எனவும், கடந்தகால பாதிப்புக்களைக் கடந்து இம்முறை மலையகம் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.