மட்டக்களப்பு வெல்லாவெளியில் தொல்பொருள் பதாதை வைக்கவிடாமல் தடுத்த 56 பேருக்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 35ஆம் கிராமம் பகுதியில் தொல்பொருள் திணைக்களத்ன் வழிகாட்டல் பதாகை நடுவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையினை தடுத்து கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் 56பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இது தொடர்பான அழைப்பாணை வெல்லாவெளி பொலிஸ் ஊடாக 35ஆம் கிராம பகுதியில் உள்ள மக்களுக்கு வழங்கப்பட்டது. கடந்த 2025,நவம்பர்,25 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 35ஆம்கிராமம் கண்ணன்புரம் பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தினால் பெயர்ப்பலகையிடுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டபோது அதற்கு எதிராக பிரதேச மக்களினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வெல்லாவெளி பொலிஸார் ஊடாக நீதிமன்றில் தொல்பொருள் திணைக்களத்தினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு (11 ) நேற்று களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிலையில் இவர்கள் அனைவருக்கும் சொந்தப் பிணை வழங்கப்பட்டு எதிர்வரும் 2026.01.09 ம் திகதிக்கு வழக்கு தவணை வழங்கப்பட்டது.
இதில் ஒருவர் அண்மையில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் உயிரிழந்திருந்த நிலையில் அவருக்கும் அழைப்பாணை அனுப்பப்பட்டதுடன், ஒரு குடும்பத்தில் பலருக்கு இவ்வாறு அழைப்பாணை அனுப்பிவைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.



