வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை: முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு மரண தண்டனை

581 Views

வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை

வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை: வெலிக்கடை சிறைச்சாலையில், 8 கைதிகள் துப்பாக்கிச்சூட்டில் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கில் முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், காவல்துறை போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் முன்னாள் காவல்துறை பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வழக்கின் தீர்ப்பு கடந்த 6ஆம் திகதி அறிவிக்கப்பட இருந்த நிலையில், தீர்ப்பு அறிவிப்பை இன்று வரை பிற்போட கொழும்பு மூவரடங்கிய விசேட நீதிமன்றம் குறித்த தினத்தில் தீர்மானித்திருந்தது.

இந்த வழக்கு, நீதியரசர்களான கிஹான் குலதுங்க, பிரதீப் ஹெட்டியாரச்சி மற்றும் மஞ்சுள திலக்கரத்ன ஆகியோர் அடங்கிய கொழும்பு மூவரடங்கிய விசேட நீதிமன்றில் கடந்த 6 ஆம் திகதி அழைக்கப்பட்டிருந்தது. இதன்போது, வழக்கின் தீர்பை தயார்ப்படுத்த முடியாத காரணத்தினால், தீர்ப்பு அறிவிப்பை பிற்போடுவதாக, மூவரடங்கிய நீதியரசர்கள் குழாமின் தலைமை நீதியரசர் கிஹான் குலதுங்க தெரிவித்தார்.

2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற இந்தப் படுகொலை சம்பவம் தொடர்பில், காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் முன்னாள் காவல்துறை பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ மற்றும் முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவா ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரினால் வழக்குத் தொடரப்பட்டது.

2019 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 4 ஆம் திகதி, சட்டமா அதிபரினால், கொழும்பு மூவரடங்கிய விசேட நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில், குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தில், 27 கைதிகள் படுகொலை செய்யப்பட்டனர்.

எனினும், 8 கைதிகளின் படுகொலை தொடர்பிலேயே சட்டமா அதிபருக்கு வழக்கு தொடர போதிய சாட்சிகள் முன்னிலையாகி இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil News

Leave a Reply