நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு ஒன்றிணைந்து செயற்படுவோம்- நாமல் ராஜபக்ஷ அழைப்பு

ஒன்றிணைந்து செயற்படுவோம்

தற்போதைய நெருக்கடி நிலைமையில் இருந்து மீள்வதற்காக அரசியல் செயற்பாடுகளை தேர்தல் காலத்திற்காக ஒத்தி வைத்துவிட்டு இப்போது ஒன்றிணைந்து செயற்படுவோம் என்று அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ தமிழ்க் கூட்டமைப்பு மற்றும் எதிர்க்கட்சியினரை கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ இவ்வாறு கேட்டுக்கொண்டார்.
அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதியினால் தமிழ்க் கூட்டமைப்புக்கும் மற்றும் எதிர்க்கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது சவால்கள் நிறைந்த காலப்பகுதியாகும். சிரேஷ்ட அரசியல்வாதிகள் உலகலாவிய சவால்களுக்கு முகம்கொடுத்தது இல்லை. இந்த உலகலாவிய நெருக்கடியில் இருந்து மீள வேண்டுமாயின் பிரிந்து நின்று சேறு பூசிக்கொண்டிருப்பதில் பலனில்லை. மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்துக்கொண்டிருப்பதிலும் பலனில்லை. இதனால் மக்களே பாதிக்கப்படுவர்.

இதனால் ஜனாதிபதி அழைப்பு விடுத்ததை போன்று அனைவரும் ஒன்றிணைந்து எதிர்வரும் 2- 3 வருடங்களுக்கு தற்போதைய நெருக்கடியில் இருந்து வெளியே வர நடவடிக்கை எடுப்போம். தேர்தல் காலத்தில் நாங்கள் அரசியல் செய்வோம். அதனால் நாங்கள் மக்களுக்காக ஒன்றாக இருப்போம்’’ என்றார் நாமல் ராஜபக்ச.

Tamil News