கிவுல் ஓயாத் திட்டத்தை கடுமையாக எதிர்ப்போம்! – ரவிகரன் எம்.பி. திட்டவட்டம்

தமிழர்கள் மீதான கட்டமைக்கப்பட்ட இனவழிப்பின் வடிவமான கிவுல் ஓயா திட்டத்தைச் செயற்படுத்துவது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று நாளை 23ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெறவுள்ளது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

அந்தக் கலந்துரையாடலில் இந்தத் திட்டத்துக்கு எதிராகத் தம்மால் கடுமையான எதிர்ப்பு வெளியிடப்படும் எனவும் அவர் கூறினார்.

நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் நேற்று நடைபெற்ற கமத்தொழில், கால்நடை வளங்கள் காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கூட்டத்தில் கிவுல் ஓயா நீர்ப்பாசனக் கட்டுமானத் திட்டத்துக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டார்.

இந்நிலையில் நாளை கிவுல் ஓயாத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும், அந்தக் கலந்துரையாடலில் அந்த விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்குமாறும் அமைச்சர் கே.டீ.லால்காந்த இதன்போது தெரிவித்தார்.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் நேற்று கமத்தொழில், கால்நடை வளங்கள் காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறியவை வருமாறு:-

“மகாவலி அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படவிருக்கின்ற கிவுல் ஓயா நீர்த்தேக்கக் கட்டுமானத் திட்டத்துக்கு 2.5பில்லியன் ரூபா நிதி இந்த வருடத்துக்கான வரவு – செலவுத் திட்டத்தில் அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டதுடன் இந்தக் கிவுல் ஓயாத் திட்டத்தைச் செயற்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதியும் பெறப்பட்டுள்ளது.

கிவுல் ஓயா திட்டத்தைச் செயற்படுத்தினால் வவுனியா வடக்கு பிரதேசத்திலுள்ள பூர்வீகத் தமிழ் மக்களின் பல சிறிய நீர்பாசனக்குளங்களும், அவற்றின் கீழான வயல் நிலங்களும், பழந்தமிழ் கிராமங்களும் பறிபோகும் அபாயம் ஏற்படும் என்பதைக் கமத்தொழில், கால்நடை வளங்கள் காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக்குழுக் கூட்டத்தில் அமைச்சர் லால்காந்தவின் கவனத்துக்குக் கொண்டு வந்தேன்.

குறிப்பாக இராமன்குளம், கொட்டோடைக்குளம், ஒயாமடுக்குளம், வெள்ளான்குளம், பெரியகட்டுக்குளம், பனிக்கல்மடுக்குளம், சன்னமுற்றமடுக்குளம், கம்மாஞ்சிக்குளம், குறிஞ்சாக்குளம், புலிக்குட்டிக்குளம், திரிவைச்சகுளம் முதலான சிறிய நீர்ப்பாசனக்குளங்களும், வெடிவைச்சகல்லு குளத்தின் கீழ் வரும் வயல்காணிகள் பகுதியளவிலும், நாவலர்பாம், கல்லாற்றுக்குளம், ஈச்சன்குளம், கூழாங்குளம் வயற்காணிகளும் வவுனியா வடக்கிலுள்ள பழந்தமிழ் கிராமங்களான காட்டுப்பூவரசங்குளம் கிராமம், காஞ்சூரமோட்டை கிராமம், மருதோடைக் கிராமத்தின் ஒருபகுதி உள்ளிட்ட பகுதிகள் குறித்த நீர்ப்பாசன அணைக்கட்டின் நீரேந்துப்பகுதிகளாக மாறும் அபாயம் ஏற்படும் என்பதை இதன்போது அமைச்சருக்குத் தெரியப்படுத்தினேன்.

இவ்வாறு தமிழ் மக்களுடைய பூர்வீக நிலங்களும், நீர்ப்பாசனக்குளங்களும் அபகரிக்கப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதையும் சுட்டிக்காட்டினேன்.

இதன்போது அமைச்சர் கே.டீ.லால்காந்த பதிலளிக்கையில், எதிர்வரும் 23ஆம் திகதி (நாளை) நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் கிவுல் ஓயாத் திட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும், அதன்போது இந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடலாம் எனவும் தெரிவித்தார்.

எனவே எதிர்வரும் 23ஆம் திகதி (நாளை) நடைபெறவுள்ள கூட்டத்திலும் கலந்துகொண்டு, கிவுல் ஓயாத் திட்டத்தால் தமிழர்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்புகள் தொடர்பில் சுட்டிக்காட்டுவதுடன், இந்தத் திட்டத்துக்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவிப்பேன் என தெரிவித்தார்.