வடக்கு மக்கள் இழந்த உயிர்களைத் தவிர அனைத்தையும் நாம் மீளவும் தருவோம்- அமைச்சர் எச்.எம்.எச். அபயரத்தன

வடக்கு மக்கள் இழந்த உயிர்களைத் தவிர அனைத்தையும் நாம் மீளவும் தருவோம் என பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி எச்.எம்.எச். அபயரத்தன தெரிவித்தார்.

வடக்கு மாகாணசபையின் முன்னேற்ற மீளாய்வு தொடர்பான விசேட கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில், பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி எச்.எம்.எச்.அபயரத்தன, கடற்றொழில், நீரியல், கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர், பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் பி.ருவான் செனரத் ஆகியோரின் பங்கேற்புடன் ஆளுநர் செயலகத்தில்  புதன்கிழமை இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு வடக்கு மாகாணத்தின் தேவைகள் பிரச்சினைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்;

அனைத்துறைகளிலும் உள்ள ஆளணி வெற்றிடங்களையும் படிப்படியாக நிரப்புவதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு துறையாக அவை நிரப்பப்படும். அதேபோல திணைக்களங்களுக்குத் தேவையான வாகனங்களும் வழங்குவதற்கு விரைவான நடவடிக்கை எடுக்கப்படும்.

மனிதவளம் மற்றும் பௌதீகவளம் ஆகியவற்றின் தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்யாமல் அபிவிருத்தியை நோக்கி நகர்வது கடினம். அதேநேரம், இந்த மாகாணத்தின் தேசிய உற்பத்திக்கான பங்களிப்பை அதிகரித்தல், வறுமை தணிப்பு, வேலையின்மையை இல்லாமல் ஆக்குதல், ஒட்டுமொத்த வடக்கு மக்களின் சனத்தொகையின் நான்கில் ஒரு பங்காக உள்ள பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துதல் போன்ற விடயங்களுக்கு மாகாணத்துக்கு ஒதுக்கப்படும் நிதியை உரிய வகையில் பயன்படுத்த வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது.

வடக்கு மாகாண சபையால் கோரப்படும் நிதி 2026ஆம் ஆண்டுக்கு விடுவிக்கப்படும். கடந்த காலத்தில் இந்த மக்கள் இழந்த உயிர்களைத் தவிர அனைத்தையும் நாம் மீளவும் தருவோம். இங்கே ஏனைய மத்திய அமைச்சுக்களுடன் தொடர்புடைய சில தேவைப்பாடுகளும் சுட்டிக்காட்டப்பட்டன. அது தொடர்பில் தொடர்புடைய அமைச்சுக்கள் ஊடாக கலந்துரையாடுவதற்கு ஏதுவான ஒழுங்குகள் செய்துதரப்படும். அதேபோல நிரந்தர நியமனத்துக்காக விசேட அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பிப்பதற்கு ஒழுங்கு செய்யப்படும்.

புதிய உள்ளூராட்சி மன்றங்களை உருவாக்குவதற்கான கோரிக்கையை முன்வைக்கின்றீர்கள். சபைகளின் வருமானத்தில் 20 சதவீதம் சம்பளமாக வழங்க வேண்டிய நிலையில் புதிதாக உருவாக்கப்படும் சபைகளால் அது முடியுமா? அந்தப் பிரதேசத்தின் மக்கள் தொகை உள்ளிட்ட பல்வேறு விடயங்களைக் கவனத்திலெடுக்க வேண்டும். அதேநேரம் சபைகளின் தரங்களை உயர்த்துவது, புதிய கட்டடங்கள் தொடர்பில் ஒருங்கிணைப்புக்குழுவின் அனுமதியுடன் சமர்ப்பியுங்கள் என்றார்.