தென்னிலங்கை அரசியலின் பிரித்தாளும் தந்திரத்திற்கு ஆளாக மாட்டோம் – சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிப்பு

சமூக வலைதளங்களிலும் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களிலும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு தலைவரை நியமிப்பது தொடர்பில் திட்டமிட்டிருப்பதாக உறுதி கோராத செய்தி ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. இந்த செய்தியில் உண்மை இல்லை என்றும் இது தென்னிலங்கை அரசியல் சக்திகளின் சதி என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளதுடன்,இந்த பிரித்தாளும் தந்திரோபாயங்களினால் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஒற்றுமையைச் சிதைக்க முடியாது என்றும் சூளுரைத்துள்ளார்.

 

இலத்திரனியல் ஊடகங்களிலும் அச்சு ஊடகங்களிலும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவராக செல்வம் அடைக்கலநாதனை நியமிப்பதற்குத் திட்டமிட்டிருப்பதாக கூட்டணியின் பங்காளிக் கட்சிகள் தெரிவித்ததாக ஓர் அனாமதேய செய்தி வெளியிடப்பட்டுள்ளதுஎன்று குறிப்பிட்ட சுரேஷ் பிரேமச்சந்திரன், “இந்த அனாமதேய செய்தி தொடர்பாக கட்சியின் பேச்சாளர் என்ற வகையில் ஊடகப்பரப்பில் இருப்பவர்கள் என்னுடன் தொடர்புகொண்டு அந்த செய்தி தொடர்பான கருத்துகளைக் கேட்டிருந்தனர்என்றும் தெரிவித்தாா். இந்த விடயம் தொடர்பாக இதுவரை நடைபெற்ற கூட்டங்கள் எதிலும் கலந்துரையாடப்படவில்லை என்பதையும்,அத்தகைய எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை என்பதுடன் எமது யாப்பில் சில மாற்றங்களை மேற்கொள்வது தொடர்பிலேயே விவாதித்திருந்தோம் என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்தாா்.

அதேநேரம் ஆளும்தரப்பு முக்கியஸ்தர்கள் சிலர் தமிழ் கட்சிகள் தனித்தனியே நின்று தீர்வுக்கான கருத்துகளைக் கூறாமல்,ஒன்றுபட்டு ஒரே கருத்தைக் கூறுவார்களாக இருந்தால் அது தொடர்பில் பேசலாம் என்றும் செய்திகளை வெளியிட்டு வருகின்றார்கள்என்றும் குறிப்பிட்ட சுரேஷ் பிரேமச்சந்திரன், “இது ஒரு வகையில் தமிழ்த் தரப்பின் மீது குற்றங்களைச் சுமத்தி தீர்வை எட்டாமல் செய்வதற்கான அரசின் சாதுர்யமான பிரித்தாளும் தந்திரோபத்தையே காட்டுகிறதுஎன்றும் தெரிவித்தாா்.