வட கடலை சூறையாட அனுமதிக்கமாட்டோம்-பேராசிரியா் சூசை ஆனந்தன் செவ்வி

வடக்குக் கடலில் இந்திய மீனவா்கள் மீன்பிடிப்பதற்கு அனுமதி வழங்குவது தொடா்பாக இரு நாட்டு அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவாா்த்தைகள் இடம்பெற்றுவருகின்றது.

வெளிவிவகார அமைச்சா் அலி சப்ரியும் இதனை உறுதிப்படுத்தியிருந்தாா். வடபகுதி மீனவா்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் தொடா்பாக லண்டன் உயிரோடை தமிழ் தாயக களம் நிகழ்வில் கலந்துகொண்டு யாழ். பல்கலைக்கழக பேராசிரியா் சூசை ஆனந்தன் இந்த வாரம் வழங்கிய செவ்வியின் முக்கியமான பகுதிகளை இலக்கு வாசகா்களுக்குத் தருகின்றாம்.

கேள்வி – வடக்கு கடல் பகுதியில் இந்திய மீனவா்கள் மீன்பிடிக்க அனுமதி கொடுப்பதற்கான ஆலோசனை ஒன்று இடம்பெறுகின்றது.  இது குறித்து உங்களுடைய கருத்து என்ன?

பதில் – வட கடலில் இழுவைமடி படகுகளுக்கு – 50 குதிரை வலு கொண்ட படகுகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும், வாரத்தில் இரண்டு நாட்களுக்கு எமது கடலில் மீன்பிடிப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என்றும், இது தொடா்பான பேச்சுவாா்த்தைக்கு இலங்கைத் துாதுக்குழு ஒன்று இந்தியா செல்லவிருப்பதாகவும் செய்தி ஒன்று வெளிவந்திருந்தது.

இது நடைமுறைப்படுத்தப்படுமாளின் அது பாரதுாரமான விளைவுகளைத்தான் வடபகுதி மீனவா்களுக்கு ஏற்படுத்தும். முதலாவதாக, இவ்வாறான உடன்படிக்கைகளைச் செய்யும் போது வடபகுதி மீனவா்களின் ஆலோசனைகளைப் பெற்று புத்திஜீவிகள், மற்றும் இதனுடன் தொடா்புபட்டவா்களுடன் கலந்தாலோசித்துத்தான் இது தொடா்பான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.

ஆனால், அரசாங்கம் தன்னிச்சையாக மேல்மட்டத்தில் உள்ள சிலரை இந்தியாவுக்கு அனுப்பி இது தொடா்பில் தீா்மானங்களை எடுப்பது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. சா்வாதிகாரமான ஒரு முடிவாகத்தான் இதனை நாம் பாா்க்கலாம்.

இப்போது, பொருளாதார நெருக்கடி காரணமாக இந்தியாவிடமிருந்து பெருமளவு உதவிகளை இலங்கை பெற்றிருக்கின்றது. இதனால், அவா்கள் கேட்கும் அனைத்தையும் கொடுப்பதாக இலங்கையின் நிலை வந்துவிட்டது.

வடக்கு கடலானது மூன்று சின்ன கடல்களைக் கொண்டது. ஒன்று பாக்கு நீரிணை, பாக்கு குடா, மன்னாா் குடா என்பனதான் அவை. இந்தக் கடலானது 1974 – 76 ஆம் ஆண்டு கடல் சட்டத்தின் பிரகாரம் எல்லைகள் வகுக்கப்பட்டு, அந்தக் கடல்பகுதி கூட இரண்டு சிறிய பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதனால் அரைவாசிப் பகுதிதான் வடபகுதி மீனவா்களுக்குச் சொந்தமாக இருக்கின்றது. ஒரு சிறிய பகுதியைத்தான் எமது மீனவா்கள் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றாா்கள்.

எமது மீனவா்களுக்கு தென்பகுதிக் கடலுக்குச் செல்வதற்கு முடியாது. அந்தப் பக்கத்தில் அனுமதிக்கமாட்டாா்கள். அதேபோல ஆழ்கடலுக்குச் சென்று மீன்பிடிப்பதற்கான வசதிகளும் எம்மிடம் இல்லை. ஏனெனில் அதற்கான முதலீடுகள், அதற்கான வசதிகள், அதற்கான பயற்சிகள், துறைமுகங்கள் என எதுவுமே எம்மிடம் இல்லை. அதனால், ஆழ்கடல் மீன்பிடிக்கும் எமது மீனவா்கள் பெருமளவுக்குச் செல்ல முடியாதிருக்கின்றாா்கள். வடமராட்சியில் ஒரு சிலா் ஆழ்கடல் மீன்பிடிக்குச் சென்றாலும் 90 வீதமானவா்கள் ஆழ்கடல் மீன்பிடிக்குச் செல்ல முடியாதவா்களாகத்தான் இருக்கின்றாா்கள்.

வடபகுதியில் உள்ள சுமாா் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான மீனவா்கள் இந்தக் கடலை நம்பித்தான் சீவிக்கின்றாா்கள். இதனை அவா்கள் தமது வாழ்வாதாரத்துக்காக நம்பியிருக்கும் நிலையில், இந்திய மீனவா்கள் இதற்குள் பிரவேசித்து அந்த வழங்களை சூறையாடிச் செல்லும் நிலை தொடா்ந்து நடந்துகொண்டுதான் இருக்கின்றது.

போா் காரணமாக வடபகுதி மீனவா்கள் எந்தளவுக்குப் பாதிக்கப்பட்டவா்கள் என்பது அனைவருக்கும் தெரியும். போரினால் அதிகளவுக்குப் பாதிக்கப்பட்டது கடற்றொழில் சமூகம்தான். இப்போதுதான் ஓரளவுக்குத் தொழிலைச் செய்வதற்கு அவா்கள் முற்பட்டிருக்கும் நிலையில் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல்களால் பெரிதும் பாதிக்கப்பட்டு, தொழிலுக்குச் செல்லமுடியாது  கஷ்டப்படும் சூழ்நிலை தொடா்ந்துகொண்டிருக்கின்றது.

வாரத்தில் மூன்று நாட்கள் அவா்கள் அத்துமீறி எமது கடல் எல்லைக்குள் வருகின்றாா்கள். இந்தக் காலப்பகுதியில் எமது மீனவா்கள் தொழிலுக்குச் செல்ல முடியாத ஒரு சூழ்நிலைதான் இப்போதும் இருக்கின்றது. இதனால், எமது வளங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றது.  தொப்புள்கொடி உறவு என்றெல்லாம் சொல்லிச் சொல்லி, எமது வளங்களை கொள்ளையடிப்பதை ஏற்கமுடியாது.

இது மட்டுமல்ல, சூழல் பாதிக்கப்படுகின்றது. எமது மீனவா்களின் வலைகள் அறுக்கப்படுகின்றன. மீனவா்களிடையே மோதல்கள் ஏற்படுகின்றது. கடந்த வாரத்தில் கூட கடற்பகுதியில் ஒரு வாள்வெட்டுச் சம்பவம் நடைபெற்றிருக்கின்றது. இதன் பின்னணி என்ன என்று ஒன்றுமே தெரியாது. ஏற்கனவே இரு பகுதி மீனவா்களுக்கு இடையிலான அடிபாட்டில் பல மீனவா்கள் கொல்லப்பட்டிருக்கின்றாா்கள். இவை தொடா்பாக பல தடவைகள் பேச்சுவாா்ததைகள் நடத்தப்பட்டிருக்கின்றது.  எத்தனையோ பேச்சுவாா்ததைகள் நடைபெற்றும் பிரயோசனமில்லை. அத்துமீறல்கள் தொடா்ந்துகொண்டுதான் இருக்கின்றது.

இந்த நிலையில், இப்போது இந்திய மீனவா்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்களுக்கு வடபகுதிக் கடலில் மீன்பிடிப்பதற்கு அனுமதிப்பது தொடா்பாக ஆராயப்படுகின்றது. நாட்டுப் படகுகளுக்கு அனுமதிப்பதாகச் சொல்லப்படுகின்றது. இவற்றில் பயன்படுத்தப்படும் வலைகள் தங்கூசி வலைகளாகும். தங்கூசி வலைகள் இலங்கையில் தடைசெய்யப்பட்டிருக்கின்றது. இழுவை வலையும் தடைசெய்யப்பட்டிருக்கு. தங்கூசி வலையும் தடைசெய்யப்பட்டிருக்கின்றது. ஆக, இந்த தடைசெய்யப்பட்ட வலைகளை அவா்கள் பயன்படுத்துவதை அனுமதிப்பதென்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாததது.

அதேவேளையில் அவா்கள் இரண்டு நாட்களுக்கு இங்கு வந்தாா்கள் என்றால் வடபகுதி கடல் அவா்களுடைய கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும். ஏனெனில் அவா்களிடம் பெருமளவு நாட்டுப் படகுகள் இருக்கின்றது. இந்தக் காலப்பகுதியில் எமது மீனவா்கள் கடலுக்குள் செல்ல முடியாது. இரண்டு நாட்களுக்கு அவா்கள் தமது தொழிலை இழப்பாா்கள். இது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. எமது வளங்களை அவா்கள் அள்ளிக்கொண்டு செல்லும் நிலைதான் காணப்படும்.

அதனால், எங்களுடன் கலந்துரையாடாமல் இவ்வாறு அவா்களுக்கு அனுமதி வழங்குவதை நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம். தாா்மீக ரீதியாகவும் அது தவறானது. ஜெயலலிதா முதல் தற்போதைய முதலமைச்சா் ஸ்டாலின் வரை தமிழக முதலமைச்சா்கள் அனைவருக்கும் நாங்கள் இந்தப் பிரச்சினை தொடா்பாக கடிதங்களை அனுப்பியிருக்கின்றோம். ஆனால், அங்கிருந்து எந்தப் பதிலும் இல்லை.

இதில் இன்னொரு விடயத்தையும் நாங்கள் பாா்க்கலாம். 1974 ஆம் ஆண்டு பிரதமராக இருந்த சிறிமாவோ பண்டாரநாயக்க கேட்டதற்கு இணங்க கச்சதீவை இந்தியப் பிரதமா் இந்திரா காந்தி இலங்கைக்கு கொடுத்ததாகச் சொல்லப்படுகின்றது. அதனைக் கொடுத்த போது, தமிழகத்தில் பெரும் ஆா்ப்பாட்டங்கள் இடம்பெற்றது. இதனை யாரிடம் கேட்டுக்கொடுத்தீா்கள் என இந்திய மத்திய அரசுக்கு எதிராக அவா்கள் போராடினாா்கள். இன்றும் இந்தப் பிரச்சினை தொடா்ந்துகொண்டுதான் இருக்கின்றது.

இத்தனை வருடங்களின் பின்னரும் கச்சதீவை மீட்க வேண்டும் என்ற போராட்டங்கள் தொடா்ந்துகொண்டுதான் இருக்கின்றது.  ஆனால், கச்சதீவு இன்றும் இலங்கையின் எல்லைக்குள்தான் இருக்கின்றது. அது இலங்கைக்குச் சொந்தமானதாகத்தான் இருக்கின்றது. நெடுந்தீவு பிரதேச சபைக்குள்தான் இந்தத்தீவும் உள்ளடக்கப்பட்டிருக்கின்றது. இது இலங்கைக்குச் சொந்தமானது என இருந்தாலும் கச்சதீவால் இலங்கைக்கோ வடபகுதிக்கோ இதுவரையில் எந்தப் பயனும் இல்லை. வருடத்தில் ஒரு தடவை திருவிழா நடைபெறும்இ அதற்குப் போய்வருவாா்கள். அது மட்டும்தான்.

அந்தத் தீவை ஆக்கபுா்வமான அபிவிருத்திக்குப் பயன்படுத்தும் எண்ணமும் கிடையாது. இந்தத் தீவை சிறப்பான முறையில் ஒரு சுற்றுலா தளமாகப் பயன்படுத்தலாம். மீன்வள ஆய்வு நிலையம் ஒன்றை அமைத்து ஆராய்ச்சிகளை முன்னெடுக்கலாம். அல்லது அதனை ஒரு கடல்புங்காவாக பயன்படுத்தி அதனை அபிவிருத்தி செய்யலாம். இவ்வாறு பல வாய்ப்புக்கள் இருக்கின்றன. ஆனால், அரசாங்கம் இவற்றில் அக்கறை செலுத்தவில்லை. நாம் அந்தத் தீவைப் பயன்படுத்துவதற்கான அனுமதியையும் அரசாங்கம் தரவில்லை. அந்தத் தீவு சும்மாதான் கிடக்குது. அது இலங்கையிடம் இருந்தானெ்ன இந்தியாவிடம் இருந்தாலென்ன எல்லாம் என்றுதான்.

இந்தத் தீவை எடுத்தமைக்காக அவா்கள் ஆா்ப்பாட்டம் செய்கின்றாா்கள் என்றால், எமது வளமான பகுதிகளைக் கொடுப்பதையிட்டு நாம் எவ்வாறு பாா்த்துக்கொண்டிருக்க முடியும்.  இங்கு ஒரு மீனவா் இது தொடா்பில் எச்சரித்திருக்கின்றாா். அவ்வாறு கொடுப்பதென்றால், எமக்கு விஷத்தைத் தந்துவிட்டு இதனை எடுத்துக்கொள்ளுங்கள் என்று அவா் எச்சரித்துள்ளாா். அதனால், இந்தப் பகுதிக்குள் அவா்கள் வந்து மீன்பிடிப்பதற்கு நாங்கள் சம்மதம் தெரிவிக்கமாட்டம்.

கேள்வி –  தினசரி இரண்டாயிரத்துக்கும் அதிகமான இந்திய மீன்பிடிப் படகுகள் தினசரி இலங்கைக்குள் ஊடுருவுதாக வெளிவிவகார அமைச்சா் அலி சப்ரி தெரிவித்திருக்கின்றாா். இதனைத் தடுத்து நிறுத்த முடியாதிருப்பதாகவும் அவா் கூறியிருப்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கின்றீா்களா?

பதில் – இதனைத் தடுக்க முடியாது என்று சொல்வது இவா்களுடைய கையாலாகத்தனம்.  இலங்கை, இந்திய அரசாங்கங்களின் கையாலாகத்தனம். இலங்கையில் இன்று முப்படைகள் இருக்கின்றது. பாதுகாப்புக்கென 41 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டிருக்கின்றது. இந்தக் கரையோரம் முழுவதும் கடற்படை நிற்கின்றது. கடலில் பாா்க்கும் போது தெரிகின்றது. இவா்களால் இந்த ஊடுருவலை கட்டுப்படுத்த முடியாது என்றால், எதற்காக இவா்கள் படைகளை வைத்திருக்கின்றாா்கள்?  இதனைச் செய்ய முடியாது என்றால், கடற்படை தேவையில்லை.

அதேவேளையில் இந்தியாவிலிருந்து மூவாயிரத்துக்கும் அதிகமான படகுகள் வருகின்றன. வந்து வளங்களை அள்ளிக்கொண்டு செல்கின்றாா்கள். உதாரணமாக ஒரு நாளைக்கு ஒரு ட்ரோலரில் கொண்டு செல்லப்படுகின்ற இறால், கடலட்டை,  நண்டு,  கணவாய், மீன் என்பனவற்றின் பெறுதி இந்திய ரூபாவில் குறைந்தது 50 ஆயிரம் ரூபா. ஒரு நாளைக்கு ஒரு படகில் இவ்வளவு வளங்கள் கொண்டு செல்லப்படுகின்றது என்றால், ஒரு நாளைக்கு வரும் 3 ஆயிரத்துக்கும் அதிகமான படகுகளில் எவ்வளவு வளங்கள் கொண்டு செல்லப்படுகின்றன என்று கணக்கு பாருங்கள். வாரத்தில் மூன்று நாள். மாதத்தில் 12 நாட்கள். எமது வளங்கள் அபகரிக்கப்படுகின்றது.

இதனை அவா்களால் தடுக்க முடியாவிட்டால், அதற்குத்தான் சா்வதேச கடல் சட்டங்கள் இருக்கின்றன. அதன்மூலமாக  முறையிடலாம்.