மனித உரிமைகள், பொறுப்புக்கூறல் தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் நியமங்களை நிறைவேற்றுவோம் – பிரதியமைச்சர் அருண் ஹேமசந்திர

மனித உரிமைகள், வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் சட்டவாட்சி என்பன தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தினால் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் முக்கிய தராதரங்களை நிறைவேற்றுவதற்கான அர்ப்பணிப்புடன்கூடிய கடப்பாட்டைத் தாம் கொண்டிருப்பதாக  வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர் அருண் ஹேமசந்திர உறுதியளித்துள்ளார்.

நான்காவது ஐரோப்பிய ஒன்றிய இந்தோ – பசுபிக் அமைச்சர்கள் மட்டக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக பெல்ஜியத்தை சென்றடைந்துள்ள வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர் அருண் ஹேமசந்திரவுக்கும் தெற்காசிய நாடுகளுடனான தொடர்புகளுக்கான ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் சேர்பன்-டிமிட்ரி ஸ்டர்ட்ஸா தலைமையிலான குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு   இடம்பெற்றது.

இச்சந்திப்பின்போது அரசாங்கத்தின் பரந்துபட்ட மறுசீரமைப்பு செயற்திட்டத்தின்கீழ் சகலரையும் உள்ளடக்கிய ஆட்சி நிர்வாகத்தைக் கட்டியெழுப்பல் மற்றும் சிறுபான்மையினப் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்தல் என்பவற்றுக்கான முயற்சிகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

அதேபோன்று ஜனநாயக மறுசீரமைப்புக்கள், மனித உரிமைகள், வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் சட்டவாட்சி என்பன தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தினால் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் முக்கிய தராதரங்களை நிறைவேற்றுவதற்கான அர்ப்பணிப்புடன்கூடிய கடப்பாட்டைத் தாம் கொண்டிருப்பதாக பிரதியமைச்சர் அருண் ஹேமசந்திர உறுதியளித்தார்.

மேலும் நிலையான ஒற்றுமை மற்றும் ஸ்திரத்தன்மையை நோக்கி ஒத்துழைப்புடன் பயணிப்பதற்கும் இலங்கை – ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவதற்கும் இருதரப்பினரும் இணக்கம் தெரிவித்தனர்.