இலங்கையை தாக்கிய ‘டித்வா’ புயலால் ஏற்பட்ட மனிதாபிமான மற்றும் பொருளாதார இழப்புக்களை நினைவு கூர்ந்த இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் பொறுப்பாளர் (Chargé d’Affaires) ஜெய்ன் ஹோவெல் ( Jayne Howell), மீட்பு மற்றும் மறுசீரமைப்பில் தொடர்ந்தும் இலங்கையுடன் ஒற்றுமையாக நிற்போம் எனத் தெரிவித்தார்.
இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பொறுப்பாளர் (Chargé d’Affaires) ஜெய்ன் ஹோவெல் ( Jayne Howell), 2026 ஆம் ஆண்டுக்கான அமெரிக்க வர்த்தக அறை (AmCham Sri Lanka) ஏற்பாடு செய்த “Elevate Sri Lanka” தலைமை நிர்வாக அதிகாரிகள் மன்றத்தில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் ”புயல் தாக்கிய 72 மணி நேரத்திற்குள் அமெரிக்கா முதற்கட்டமாக 2 மில்லியன் அமெரிக்க டொலர் மனிதாபிமான உதவியை ஒப்புதல் அளித்ததாகவும், இரண்டு வாரங்களுக்குள் அதனை இரட்டிப்பாக்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், இரண்டு C-130 விமானங்கள் மற்றும் அமெரிக்க விமானப்படை நிபுணர்கள் இலங்கை இராணுவத்துடன் இணைந்து 170,000 கிலோக்கும் அதிகமான நிவாரணப் பொருட்களை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வழங்கியதாகவும் தெரிவித்தார்.
அமெரிக்க வர்த்தக அறை (AmCham) செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து மருந்து உதவிக்கான நிதி திரட்டும் முயற்சிகளையும் முன்னெடுத்ததாக அவர் கூறினார்.
அமெரிக்காவின் வெளிநாட்டு உதவி கொள்கை “நிலைத்தன்மை, வேகமான செயற்பாடு மற்றும் நீண்டகால பொருளாதார வளர்ச்சி” ஆகியவற்றை மையமாகக் கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தென் ஆசியாவின் முன்னணி கொள்கலன் மாற்றுத்துறைமுகமாக விளங்கும் கொழும்பு துறைமுகத்தின் விரிவாக்கத் திட்டங்கள் 2027 ஆம் ஆண்டிற்குள் 15 மில்லியன் கொள்கலன்களை கையாளும் திறனை எட்டும் என அவர் குறிப்பிட்டார்.
“வலுவான கொழும்பு துறைமுகம், அமெரிக்க உற்பத்தியாளர்களுக்கும் நுகர்வோருக்கும் வேகமான மற்றும் நம்பகமான விநியோகச் சங்கிலிகளை உருவாக்கும். இது இந்தியப் பெருங்கடல் வணிக மையமாக இலங்கையின் நிலையை மேலும் வலுப்படுத்தும்” என அவர் தெரிவித்தார்.
அமெரிக்கா தொடர்ந்து 13 ஆண்டுகளாக உலகளவில் நேரடி வெளிநாட்டு முதலீட்டிற்கான முக்கிய இலக்காகத் திகழ்கிறது என அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கை நிறுவனங்கள் அமெரிக்காவில் முதலீடு செய்யவும், SelectUSA திட்டத்தின் மூலம் மாநில அளவிலான முதலீட்டு வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளவும் முடியும் என அவர் அழைப்பு விடுத்தார்.
“மறுசீரமைப்பு என்பது இழந்ததை மீட்டெடுப்பதற்கான முயற்சியே, இருப்பினும் நவீன, பல்துறை மற்றும் நியாயமான விதிமுறைகளில் அடிப்படையைக் கொண்ட பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பும் ஆகும்” என அவர் வலியுறுத்தினார்.
அமெரிக்க நிறுவனங்களுக்கு நியாயமான, வெளிப்படையான மற்றும் போட்டித்தன்மை கொண்ட சூழலை உருவாக்க இலங்கை அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவோம் என அவர் உறுதியளித்தார்.
“2026 ஆம் ஆண்டு கூட்டாண்மையால் மட்டுமல்ல, செயல்திறனால் வரையறுக்கப்படும் ஆண்டாக மாற்றுவோம்” என அவர் தனது உரையை நிறைவு செய்தார்.



