சாட்சியங்களை தயார்ப்படுத்தும் பணிகளை முன்னெடுக்கவுள்ளோம் – பசெலற்

சாட்சியங்களை தயார்ப்படுத்தும் பணி

சிறீலங்கா அரசு எமது பரிந்துரைகளையும், தனது வாக்குறுதிகளையும் நடைமுறைப் படுத்துவதில் எந்த முன்னேற்றத்தையும் மேற்கொள்ளாத போதும், நாம் ஐ.நாவிடம் உள்ள ஏறத்தாழ 120,000 ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு, சாட்சியங்களை தயார்ப்படுத்தும் பணிகளை முன்னெடுக்க வுள்ளோம் என ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் மிசேல் பசெலற் தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை ஆணைக்குழுவின் 48 ஆவது கூட்டத்தொடரில் அவர் மேற்கொண்ட உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இந்த வருடத்தின் முடிவுக்குள் அதிகளவான ஆதாரங்களை சேகரிக்கும் பணிகளை ஆரம்பிக்கவுள்ளோம். 46 ஆவது அமர்வில் நிறைவெற்றப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான குழு ஒன்றும் அமைக்கப்படவுள்ளது.

அதற்கான நிதி உதவிகள் தொடர்பில் உறுப்பு நாடுகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

சிறீலங்காவின் ஊழல்மிக்க மற்றும் இராணுவ ஆட்சிமுறையே தற்போதைய பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகளுக்கு காரணம். ஐ.நாவுடன் இணைந்து செயற்படப் போவதாக இலங்கை அரச தலைவர் கூறியதை வரவேற்கிறேன். ஆனால் நடவடிக்கை என்பதே இங்கு முக்கியமானது.

கடந்த ஜனவரி மாதம் அவர் அமைத்த விசாரணைக்குழுவின் அறிக்கையானது பகிரங்கமாக வெளியிடப்பட வேண்டும். இந்த வருட முடிவுக்குள் அது நிறைவடையும் என எதிர்பார்க்கிறேன்.

காணாமல் போனோர் அலுவலகம் கிளிநொச்சியிலும் அமைக்கப்பட்டபோதும், அது வெளிப்படைத்தன்மையுடன் இயங்குவதுடன், பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையையும் பெறவேண்டும்.

சிறீலங்காவில் நீதித்துறை சீரழிந்து வருகின்றது. கொழும்பில் 11 பேர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டது தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வழக்கு கைவிடப்பட்டதுடன்இ படுகொலையில் ஈடுபட்டவர்களும் அங்கு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மனி உரிமை செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் கல்விமான்கள் ஆகியோரும் அங்கு அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ilakku.org/ilakku-weekly-epaper-148-september-19-2021