எமது ஜனாதிபதி வேட்பாளரை இரு வாரங்களில் அறிவிப்போம் – பொதுஜன பெரமுன அறிவிப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பொதுவேட்பாளராக களமிறக்க தீர்மானித்தால் அதற்கு முழுமையான ஆதரவு வழங்குவோம். எமது வேட்பாளரை இன்னும் இரு வாரங்களில் அறிவிப்போம் என கடற்றொழில் வளங்கள் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா தெரிவித்தார்.

கடற்றொழில் வளங்கள் அமைச்சின் பணிமனையில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

மேலும், “ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளோம். சிறீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான பரந்துபட்ட அரசியல் கூட்டணி அமைப்பதற்கு சகல தரப்பினருடனும் பேச்சில் ஈடுபட்டுள்ளோம். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பொதுவேட்பா ளராக களமிறக்க கட்சி மட்டத்தில் தீர்மானம் எடுத்தால் அதற்கு முழுமையாக ஆதரவு வழங்குவோம். யாரை வேட்பாளராக அறிவிப்பது என்பது தொடர்பில் விரிவான பேச்சு முன்னெடுக்கப்படுகிறது.

எமது ஜனாதிபதி வேட்பாளரை இன்னும் இரு வாரங்களில் அறிவிப்போம். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பொதுவேட்பாளராக கட்சி அறிவிக்குமாயின் அதனை முழுமையாக வரவேற்போம். ஏனெனில், 2022ஆம் ஆண்டு அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்த போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸநாயக்க ஆகியோர் அரசாங்கத்தை பொறுப்பேற்கவில்லை.

ஆனால், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தனிமனிதராக அரசாங்கத்தை பொறுப்பேற்றார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நிர்வாகத்தால் குறுகிய காலத்தில் நாடு வழமைக்கு திரும்பியுள்ளது. ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தை மீண்டும் தோற்றுவிப்பதற்கு பொதுஜன பெரமுன தீர்மானித்தால் அதற்கு நிபந்தனையற்ற வகையில் ஒத்துழைப்பு வழங்குவோம்” என்று அவா் தெரிவித்தாா்” என்றார்.