இனவாதமற்ற தேசிய ஒற்றுமை நிறைந்த வளமான நாடே எமக்குத் தேவை: யாழில் ஜனாதிபதி அநுர தெரிவிப்பு

எந்த மொழியைப் பேசினாலும், எந்த மதத்தைப் பின்பற்றினாலும் அனைத்துப் பிரஜைகளும் கௌரவத்துடன் வாழக்கூடிய இனவாதமற்ற, தேசிய ஒருமைப்பாடு நிறைந்த வளமான நாட்டை கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் நோக்கம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

யாழ்ப்பாணம், வேலணை,  ஐயனார் கோவில் விளையாட்டு மைதானத்தில் வியாழக்கிழமை (15) பிற்பகல்  நடைபெற்ற வட மாகாண தைப்பொங்கல் விழாவில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் ஏனைய காலங்களில் பல்வேறு இடங்களில் இனவாத மோதல்கள் மற்றும் இனவாத  போக்குகள் இடம்பெற்றன. இனவாதமற்ற தேசிய ஒற்றுமை நிறைந்த வளமான நாடே எமக்குத் தேவை.எங்கு பிறந்தாலும் எந்த மொழி பேசினாலும் எந்த மதத்தை பின்பற்றினாலும் எத்தகைய கலாசாரச் சூழலில் வாழ்ந்தாலும் அனைவருக்கும் எமது நாட்டில்  கௌரவமான பிரஜையாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்துவதே  எமது அபிலாசையாகும் என தெரிவித்துள்ளார்.