பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு கூட்டுப் பொறுப்புடன் முயற்சிக்க வேண்டும்

இலங்கையின் விழுந்து கிடக்கும்  பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு மருந்து கொடுக்கும் நேரம் தாண்டிவிட்டது. எனவே கூட்டுப் பொறுப்புடனே முயற்சிக்க வேண்டும் என யாழ் பல்கலைக்கழக பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் சிதம்பரநாதன் உதயகுமார் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

நாட்டின் பொருளாதாரம் பாரிய நெருக்கடி நிலைமையை சந்தித்துள்ளது.  எதிர்வரும் மாதங்களில் பாரிய பொருளாதார நெருக்கடியை சந்திப்பதற்கான எதிர்வு கூறல்கள் வெளியிடப்பட்டு வருகிறன.

இலங்கையில் திட்டமிடாத அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் வெளிநாட்டுக் கடன் திட்டங்களினால் நாடு இன்று பாரிய பொருளாதார பின்னடைவை எதிர்நோக்கியுள்ளது.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியிடம் கடன் கேட்க வேண்டுமானால் பல்வேறு நிபந்தனைகள் விதித்துள்ளனர். ஆனால் சீனாவிடம் நிபந்தனை இல்லாமல் கடன்களை வேண்டியது. எனவே தற்போது நாடு பாரிய பொருளாதார அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது.

இலங்கை பாரிய பொருளாதார பின்னடைவை எதிர்நோக்கும் என ஏற்கனவே உலக நாடுகளும் சர்வதேச அமைப்புகளும் எச்சரித்திருந்தன. இச்சந்தர்ப்பத்திலேயே சர்வதேச நாணய நிதியத்திடம்​சென்று இருக்க வேண்டும்.

ஆனால் எமது நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டு செல்கின்ற போது மத்திய வங்கி ஆளுநர்களை மாற்றிப் பார்த்தனர். ஒன்றுமே நடைபெறவில்லை.

உதாரணமாகச் சொன்னால் நோயுள்ள ஒருவருக்கு ஆயுர்வேத சிகிச்சையை வழங்கிய பின்னர் இயலாத சமயம் பார்த்து ஆங்கில மருத்துவத்தை செய்யலாமென முயற்சிப்பதே எமது பொருளாதாரத்திலும் இடம்பெற்றுள்ளது.

உரிய நேரத்தில் பொருளாதாரம் தொடர்பில் நடவடிக்கை எடுக்காமையே நாம் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு காரணம்.  இதனை எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கு மேலாக நாம் அனுபவிக்க வேண்டியுள்ளது.ஆகவே நாட்டின் பொருளாதாரத்தை மேலும் கடன்களை வாங்குவதாலோ அல்லது புதிய நாணயத்தாள்களை அச்சிடுவதாலோ பிரச்சினை தீரப்போவதில்லை மேலும் அதிகரிக்கும்.

ஆகவே விழுந்து கிடக்கின்ற எமது பொருளாதாரத்தை அரசியல் சமூக மற்றும் அதிகாரிகளின் கூட்டுப்பொறுப்புணர்ந்த அர்ப்பணிப்புடனே முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

நன்றி- தினகரன்

Tamil News