காற்றாலை அமைக்கும் விடயத்தில் ஜனாதிபதியுடன் எங்களுக்கு எந்த ஒப்பந்தமும் கிடையாது!

மன்னாரில் காற்றாலைகளை அமைக்கும் விடயத்தில் ஜனாதிபதியுடன் நாங்கள் எந்தவொரு ஒப்பந்தத்திலும் ஈடுபடவில்லை என மன்னார் ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்தார்.

ஆயருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நேற்றுமுன்தினம் சிறப்புக் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதன் போது, ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைய, மன்னாரில் காற்றாலை அமைக்கப்படுவதற்கு ஆயர் அனுமதி வழங்கியுள்ளார் என்று தகவல்கள் வெளிவந்திருந்தன. இவ்வாறான நிலையிலேயே, அந்தத் தகவல்களை ஆயர் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

ஜனாதிபதியுடனான எனது சந்திப்பில், காற்றாலைகள் தொடர்பான எமது பிரச்சினைகளை அவரிடம் தீர்க்கமான முன்வைத்தேன். ஏன் நாங்கள் காற்றாலைகளை எதிர்க்கின்றோம். எமது மக்களின் கோரிக்கை என்னவாக இருக்கின்றன என்று தெளிவுபடுத்தினேன். ஆனால், தற்போது அமைக்கத் திட்டமிட்டுள்ள 14 காற்றாலைகளையும் அமைப்பதில் அரசாங்கம் உறுதியாகவுள்ளது.

இந்தப் 14 காற்றாலைகளையும் அனுமதித்தால், எதிர்காலத்தில் எந்தவொரு காற்றாலையும் மன்னாருக்குள் வராது என்றும், கனியமணல் அகழ்வு இடம்பெறாது என்றும் ஜனாதிபதி என்னிடம் தெரிவித்தார். அமைச்சரவை ஊடாக இதற்கு உத்தரவாதம் வழங்க முடியும் என்றும் அவர் கூறினார். ஆனால், எமது நிலைப்பாட்டை இன்னமும் ஜனாதிபதியிடம் தெரிவிக்கவில்லை.

நான் அங்கு எந்தவித ஒப்பந்தங்களையும் செய்யவில்லை. எங்களுடைய மக்களின் குரலைப் பிரதிபலிக்கவே சென்றேன். அதையே செய்தேன். ‘மக்களுடன் கலந்துரையாடி விட்டு எமது நிலைப்பாட்டைத் தெரிவிப்போம்’ என்ற தகவல் மட்டுமே ஜனாதிபதிக்கு எம்மால் கூறப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் நாங்கள் மக்களுடனும், சர்வமதத் தலைவர்களுடனும், போராட்டத்தில் ஈடுபட்டோருடனும் கலந்துரையாடல் நடத்த வேண்டியுள்ளது. அதன் பின்னரேயே நாம் ஒரு தீர்மானத்துக்கு வருவோம் -என்றார்.