பேரனர்த்தத்துக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கையின் மீட்சிக்கு உதவக்கூடிய மேலதிக வழிமுறைகள் தொடர்பில் தாம் ஆராய்ந்துவருவதாகவும், அனர்த்தத்தின் பின்னரான இலங்கையின் பொருளாதார நிலைவரம் குறித்த மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டவுடன் தாம் உதவக்கூடிய வழிமுறைகள் தொடர்பில் ஆராய்ந்து அறிவிக்கப்படும் எனவும் சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் ஜுலி கொஸாக் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டம் குறித்த 5 ஆம் கட்ட மீளாய்வு தொடர்பில் எட்டப்பட்ட உத்தியோகத்தர் மட்ட இணக்கப்பாடு அடுத்தகட்ட ஒப்புதலுக்காக எதிர்வரும் 15 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குனர் சபையினால் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறானதொரு பின்னணியில் வியாழக்கிழமை (04) வொஷிங்டனில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் மாதாந்த செய்தியாளர் சந்திப்பின்போது இலங்கை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே ஜுலி கொஸாக் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதேவேளை சூறாவளியினால் ஏற்பட்ட மனிதாபிமான, சமூக மற்றும் பொருளாதார சேதங்களை மதிப்பீடு செய்வதை முன்னிறுத்தி இலங்கை அரசாங்கம், அபிவிருத்திப் பங்காளிகள் மற்றும் சம்பந்தப்பட்ட ஏனைய தரப்புக்களுடன் மிகநெருக்கமாகப் பணியாற்றிவருகிறோம். வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் பல பாகங்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருப்பதுடன் பெரும் எண்ணிக்கையானோர் உயிரிழந்திருக்கும் நிலையில், அதன் விளைவாக பொருளாதார நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கிறோம். அனர்த்தத்தின் பின்னரான பாதிப்புக்கள் தொடர்பான மதிப்பீடு பூர்த்திசெய்யப்பட்டதன் பின்னர், எம்மால் இலங்கையின் பொருளாதார நிலைவரம் குறித்த சரியான மதிப்பீட்டைப் பெற்றுக்கொள்ளமுடியும்.
அதேபோன்று விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டத்தின்கீழ் நாம் இலங்கையின் மீட்சி, மறுசீரமைப்பு மற்றும் மீளெழுச்சிக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறோம். அத்திட்டம் தொடர்பான 5 ஆம் கட்ட மீளாய்வு குறித்து இலங்கை அரசாங்கத்துக்கும் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளுக்கும் இடையில் கடந்த ஒக்டோபர் மாதம் உத்தியோகத்தர் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டது.
இந்நிலையில் இலங்கையின் மீட்சிக்கு உதவக்கூடிய மேலதிக வழிமுறைகள் தொடர்பில் நாம் ஆராய்ந்துவருகிறோம். நாணய நிதியத்தின் இயக்குநர் சபைக் கூட்டம் எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கையின் பொருளாதார நிலைவரம் தொடர்பான மதிப்பீடு நிறைவடைந்ததும், எவ்வாறு உதவிகளை வழங்கமுடியும் என்பது குறித்து ஆராய்ந்து, அதுபற்றிய விபரங்களை பின்னர் அறிவிப்போம் என்றார்.



