இலங்கையின் பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு!

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நாட்டின்பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் மேலும் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

காலி, மாத்தறை, களுத்துறை, கொழும்பு, கண்டி, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் அதிக மழை பெய்துள்ளதாகவும், களனி, அத்தனகல, ஜின்தொட்ட மற்றும் பெந்தர ஆகிய மாவட்டங்கள் கிட்டத்தட்ட 50 மில்லிமீட்டர் மழையைப் பெற்றுள்ளதாகவும், களு கங்கைப் பகுதி இந்த மழையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி, அங்குள்ள நீர்மட்டம் வேகமாக அதிகரித்துள்ளதாகவும் நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, களு கங்கையின் நீர்மட்டம் அதிகரித்ததன் காரணமாக, இரத்தினபுரி, மில்லகந்த மற்றும் எல்லகாவ பகுதிகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆனால், தற்போது பெய்யும் மழையின் அடிப்படையில், வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படவில்லை என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், எதிர்காலத்தில் குறிப்பிடத்தக்க மழைப்பொழிவு இருந்தால், வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது, எனவே களு கங்கையின் கரையோரத்தில் வசிப்பவர்கள் இது தொடர்பாக விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், திணைக்களம் பொதுமக்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளது.

இதற்கிடையில், களனி கங்கை மற்றும் அத்தனகல ஓயாவின் கரையோர மக்களும் குறிப்பாக கவனமாக இருக்க வேண்டும். மேலும் எதிர்காலத்தில் பெய்யும் மழையின் அடிப்படையில் அந்தப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் எனவும் நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.