இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான யுத்தகால பாலியல் வன்முறைகள் : சர்வதேச பொறுப்புக்கூறல் அவசியம்!

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற யுத்த காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள் குறித்து சர்வதேச ரீதியான பொறுப்புக்கூறலை அவசியம் என்பதை கனேடிய தமிழர் தேசிய பேரவை (National Council of Canadian Tamils – NCCT) மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

ஜனவரி 13, 2026 அன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகம் (OHCHR) வெளியிட்ட “We Lost Everything – Even Hope for Justice: Accountability for Conflict-Related Sexual Violence in Sri Lanka” என்ற அறிக்கையை மேற்கோள் காட்டி,  இலங்கையில் யுத்தக காலத்தில் பாதுகாப்புப் படைகளால் தமிழர்கள் பாலியல் வன்முறைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என கனேடிய தமிழர் தேசிய பேரவை ( NCCT ) தெரிவித்துள்ளது.

1985 முதல் 2024 வரையிலான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஐ.நா. விசாரணைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுடன் நடத்தப்பட்ட நேரடி கலந்துரையாடல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, பாலியல் வன்முறை என்பது அச்சுறுத்தல், தண்டனை மற்றும் கட்டுப்பாடு ஆகியவற்றுக்கான ஆயுதமாக திட்டமிட்ட முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

காவல் நிலையங்கள், தடுப்பு முகாம்கள், சோதனைச் சாவடிகள் மற்றும் வீடுகளிலேயே கூட தமிழ்ப் பெண்கள் மற்றும் ஆண்கள் கடுமையான பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பாலியல் வன்முறைகள் காரணமாக உடல் மற்றும் மனநல பாதிப்புகள், குடும்ப அமைப்புகள் சிதைவு, சமூக ஒதுக்கல், வறுமை, நீண்டகால நோய்கள், இனப்பெருக்க பாதிப்புகள் போன்ற பல விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது. மேலும், இந்த பாதிப்புகள் தலைமுறை தலைமுறையாக தொடரும் மனஅழுத்தங்களாக (Intergenerational Trauma) மாறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பாலியல் வன்முறைகளுக்கு காரணமான எவரும் இதுவரை சட்டத்தின் முன் கொண்டுவரப்படவில்லை என்றும், இலங்கையின் அரசின் உள்ளக விசாரணை முறைகள் நம்பகமான நீதியை வழங்கத் தவறியுள்ளதாகவும் கனேடிய தமிழர் தேசிய பேரவை குற்றம்சாட்டியுள்ளது.

இதனால், முழுமையாக சர்வதேசத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும், சுயாதீனமான, நம்பகமான விசாரணை மற்றும் வழக்குத் தொடரும் அமைப்பு ஒன்றே உண்மையை வெளிக்கொண்டு வர முடியும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஐக்கிய நாடுகள், கனடா அரசு மற்றும் சர்வதேச சமூகத்தினர் இணைந்து உடனடி, வலுவான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு,

மோதல் தொடர்பான பாலியல் வன்முறைகள் மற்றும் தமிழர் இன அழிப்பு குற்றச்சாட்டுகள் தொடர்பில் சர்வதேச பொறுப்புக்கூறலை உறுதி செய்ய வேண்டும் என கனேடிய தமிழர் தேசிய பேரவை அறிக்கையொன்றை வெளியிட்டு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் யுத்த காலத்தின்போது இடம்பெற்ற பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களிடம் இலங்கை அரசு பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டுமெனவும் யுத்த காலத்தின்போது இடம்பெற்ற பாலியல் வன்முறைகளுக்கு இன்னும் நீதி வழங்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.