இலங்கை கடன் நெருக்கடியில் இருந்து மீள முயற்சித்துக் கொண்டிருக்கும் நிலையில், ‘டிட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட பாரிய சேதங்கள், நாட்டின் பொருளாதார மீட்சி முயற்சிக்குப் புதிய அழுத்தத்தைக் கொடுக்கும் என்று மூடிஸ் முதலீட்டு சேவை நிறுவனம் எச்சரித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிகழ்ச்சித் திட்டத்துக்கும், அதனுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புகளுக்கும் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு தொடர்ந்தாலும், சேதங்களைச் சீரமைக்க ஏற்படும் மேலதிக செலவுகள், கடன் மீள செலுத்துவதற்கு நிதி சேகரிக்கும் செயல்முறையை தாமதமாக்கும் என்று அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
சூறாவளியின் காரணமாக, வீதிகள், பாலங்கள், ரயில் வலைப்பின்னல்கள் மற்றும் மின்சார அமைப்புகள் உள்ளிட்ட அத்தியாவசிய உட்கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. இதனால் விநியோகச் சங்கிலிகள் மற்றும் தேசிய பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இலங்கையின் பொருளாதாரத்தில் முக்கிய வேலைவாய்ப்பு மூலங்களாக இருக்கும் சுற்றுலா, விவசாயம் மற்றும் உற்பத்தி ஆகிய துறைகள் இதனால் கடுமையாக பாதிக்கப்படக்கூடும் என்று மூடிஸ் முதலீட்டு சேவை நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் போன்று இலங்கையும் காலநிலை மாற்றத்தால் வரும் ஆபத்துகளைச் சமாளிக்கப் போராடுகின்றது. அனர்த்தங்களை சமாளித்து மீண்டு வருவதற்கான நிதி பலம், தமது அதன் அண்டை நாடுகளை விட இலங்கைக்கு குறைவாகவே உள்ளது என மூடிஸ் குறிப்பிட்டுள்ளது.
இத்தகைய காலநிலையுடன் தொடர்புடைய அபாயங்களைக் குறைப்பதற்கு திறமையான நிர்வாகம் அத்தியாவசியம் என்றும் அந்த நிறுவனம் மேலும் வலியுறுத்தியுள்ளது.


