இலங்கையில் கடந்த கால போரியல் குற்றங்கள் குறித்த விசாரணைகளை விரைவுபடுத்துவதற்காக, தடயவியல் நிபுணர்கள் உட்பட ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் மூலம் தொழில்நுட்ப உதவியைப் பெற இலங்கை தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் அகழப்படும் மனித புதைகுழிகளில் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண உதவுவதும் இத்தகைய ஒத்துழைப்பில் அடங்கும் என்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் கூறியுள்ளார்.
மனித புதைகுழிகளை அகழும் செயற்பாட்டுடன் தொடர்புடைய நீதித்துறை அதிகாரிகளின் உத்தரவுகளைப் பொறுத்து, இந்த உதவியைப் பெறும் செயற்பாடு அமையும் என்று அமைச்சர் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பான புதிய தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்புக்குத் திகதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால் வரைவுத் தீர்மானத்திலான திருத்தங்கள் செப்டம்பர் 25 ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
வரைவுத் தீர்மானத்தில் பெரிய திருத்தங்கள் எதுவும் எதிர்பார்க்கப்படவில்லை.
எனினும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கண்காணிப்பில் இருக்கும் என்றும் அமைச்சர் விஜித ஹேரத் கூறியுள்ளார். அதேநேரம் இலங்கையின் பொறுப்புக்கூறல் காலமும் இரண்டு வருடங்களால் நீடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, இலங்கை மீதான மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரத்தை நீடிக்கும் வரைவுத் தீர்மானத்தை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம், அதன் முக்கிய ஆதரவாளர்களான பிரித்தானியா, கனடா, மலாவி, மொண்டினீக்ரோ மற்றும் வடக்கு மெசிடோனியா ஆகிய நாடுகள் ஒப்படைத்தன.