போர்க்குற்ற விவகாரம் -மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தல்

சர்வதேச சட்டத்தின் பிரகாரம் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டோரைத் தண்டிக்கவேண்டிய கடப்பாடு இலங்கை அரசாங்கத்துக்கு இருக்கிறது. அக்கடப்பாடு நிறைவற்றப்படும் வரை பொறுப்புக்கூறலுக்கான அழுத்தத்தை மேலும் வலுவாகப் பிரயோகிப்பதற்குரிய நடவடிக்கைகளை சர்வதேச நாடுகளின் அரசாங்கங்கள் முன்னெடுக்கவேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின்கீழ் இயங்கிவரும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தினால் தயாரிக்கப்பட்டுவந்த இலங்கையில் மோதல்களின்போது இடம்பெற்ற பாலியல் வன்முறைகள் தொடர்பான பொறுப்புக்கூறல் பற்றிய ‘நாங்கள் அனைத்தையும் இழந்துவிட்டோம் – நீதி கிட்டும் என்ற நம்பிக்கையைக்கூட இழந்துவிட்டோம்’ எனும் தலைப்பிலான 30 பக்க விரிவான அறிக்கை கடந்த செவ்வாய்க்கிழமை (13) வெளியிடப்பட்டது.

இலங்கையில் ஆயுதமோதலின்போதும், அதன் பின்னரும் நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறைகள் வெறுமனே தற்செயலாக அங்கொன்றும், இங்கொன்றுமாக இடம்பெற்ற சம்பவங்கள் அல்ல எனவும், மாறாக அவை வேண்டுமென்றே பரந்துபட்ட ரீதியில் நிகழ்த்தப்பட்ட, முறையாகக் கட்டமைக்கப்பட்ட வன்முறைகளின் ஓரங்கமாகும் எனவும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி இம்மீறல்கள் தகவல்களைத் திரட்டுவதற்கும், மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கும, தனிநபர்கள் மற்றும் சமூகங்களை ஒடுக்குவதற்கும், பரவலான அச்ச மற்றும் அவமான உணர்வை வேரூன்றச் செய்வதற்குமான ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி இலங்கையில் யுத்தகாலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள் தொடர்பான காத்திரமான இவ்வறிக்கை குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கையில் யுத்தகாலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் புதிய அறிக்கையானது, இலங்கையில் நிகழ்ந்த சர்வதேச சட்டங்களுக்கு எதிரான குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கான போராட்டத்தில் முன்னேற்றகரமானதொரு நகர்வாகும்.

கடந்த 13 ஆம் திகதி வெளியிடப்பட்ட இவ்வறிக்கையில் யுத்தகால பாலியல் வன்முறைகள் வேண்டுமென்றே பரந்துபட்ட ரீதியில் நிகழ்த்தப்பட்ட, முறையாகக் கட்டமைக்கப்பட்ட வன்முறைகளின் ஓரங்கமாகும் எனச் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதுடன் அவற்றைப் போர்க்குற்றங்களாகவோ அல்லது மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்களாகவோ கருதமுடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வறிக்கையின் ஊடாகக் கண்டறியப்பட்டிருப்பதன் பிரகாரம் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டுள்ள குற்றங்கள், அரசாங்கம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி மற்றும் இழப்பீட்டைப் பெற்றுக்கொடுப்பதற்கும், குற்றவாளிகளைப் பொறுப்புக்கூறச்செய்வதற்கும் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டியதன் அவசியத்தைக் காண்பிக்கின்றன.

அதேவேளை இலக்கிடப்பட்ட தடைகள், குற்றவியல் விசாரணைகள், வழக்குத்தாக்கல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கான முயற்சிகளுக்கு சர்வதேச நாடுகளின் அரசாங்கங்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது படையினரால் தமிழ்ப்பெண்கள் வன்புணரப்பட்டமை குறித்து நீண்டகாலமாக அறிந்திருந்தாலும், இத்தகைய கட்டமைக்கப்பட்ட பாலியல் வன்முறைகள் அரசாங்கங்களினால் நீண்டகாலமாகப் புறந்தள்ளப்பட்டும், அவற்றுக்குப் பொறுப்பானவர்களைத் தண்டிக்க இயலாமல் அக்குற்றங்கள் நியாயப்படுத்தப்பட்டும் வந்திருப்பதாக ஐ.நாவின் அறிக்கை கூறுகிறது.

இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதற்குரிய முயற்சிகளை சர்வதேசப் பங்காளிகள் ஆரம்பிக்கவேண்டும்.

இலங்கையில் சர்வதேச சட்டங்களுக்கு எதிராக நிகழ்ந்த குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டுவதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் 2021 ஆம் ஆண்டில் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டம் நிறுவப்பட்டது. இருப்பினும் இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் இடையில் 26 வருடகாலமாக இடம்பெற்ற யுத்தத்தின்போது நிகழ்த்தப்பட்ட சர்வதேசக் குற்றங்கள் தொடர்பில் நம்பகமான விசாரணைகளை முன்னெடுப்பதற்கும், குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கும் கடந்தகால அரசாங்கங்கள் தவறியிருக்கின்றன.

‘நீதியை நிலைநாட்டுவோம்’ என்ற வாக்குறுதியுடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் கடந்த 2024 ஆம் ஆண்டு ஆட்சிபீடம் ஏறியிருந்தாலும், தற்போதுவரை எவ்வித முன்னேற்றமும் அடையப்படவில்லை. இருப்பினும் இவ்வாறான மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு மருத்துவப் பிரச்சினைகளுக்கும், சமூக ரீதியான தாக்கங்களுக்கும் முகங்கொடுத்துவருகின்றனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கை அரசாங்கமும், அதன் சர்வதேசப் பங்காளிகளும் இணைந்து பாதிக்கப்பட்டோருக்கு அவசியமான மருத்துவ உதவிகள், இடைக்கால நிவாரணம் உள்ளிட்ட உதவிகளை வழங்குவதற்கு ஏற்றவாறான உடனடி செயற்திட்டமொன்றை ஆரம்பிக்கவேண்டும்.

சர்வதேச சட்டத்தின் பிரகாரம் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டோரைத் தண்டிக்கவேண்டிய கடப்பாடு இலங்கை அரசாங்கத்துக்கு இரு;ககிறது. அக்கடப்பாடு நிறைவற்றப்படும் வரை பொறுப்புக்கூறலுக்கான அழுத்தத்தை மேலும் வலுவாகப் பிரயோகிப்பதற்குரிய நடவடிக்கைகளை சர்வதேச நாடுகளின் அரசாங்கங்கள் முன்னெடுக்கவேண்டும் என அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.