பிணை நிபந்தனையை நிறைவேற்ற தவறிய வியாழேந்திரன் மீண்டும் விளக்கமறியலில்….

மணல் அனுமதிப் பத்திரம் வழங்குவதற்காக வர்த்தகர் ஒருவரிடம் இருந்து 15 லட்சம் ரூபாய் கையூட்டல் பெறப்பட்ட சம்பவத்துக்கு உதவிய குற்றச்சாட்டில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க எஸ்.வியாழேந்திரனுக்கு பிணை வழங்கப்பட்டது.

கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் அவர் இன்று (08) பிரசன்னப்படுத்;தப்பட்ட போது அவருக்கு பிணை வழங்கப்பட்டது. சந்தேகநபருக்கு எதிரான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றுக்கு அறியப்படுத்தியது.

இதன்படி, தமது சேவை பெறுநரிடம் விசாரணைகள் நிறைவடைந்துள்ளமையினாலும், சந்தேகநபர் சாட்சியாளர்களை அச்சுறுத்தியதாக முறைப்பாடு கிடைக்காத காரணத்தினாலும் அவருக்கு பிணை வழங்கப்பட வேண்டும் என்று பிரதிவாதி சார்பில் மன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ கோரியிருந்தார்.

இதன்படி, முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதவான், முன்னாள் இராஜாங்க எஸ்.வியாழேந்திரனை 5 லட்சம் ரூபாய் றொக்கப் பிணையிலும் 10 லட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளிலும் விடுவித்துள்ளார்.

எவ்வாறாயினும் முன்னாள் இராஜாங்க எஸ்.வியாழேந்திரன் பிணை நிபந்தனையை நிறைவேற்ற தவறியமையால் அவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
அதேநேரம், சந்தேகநபரான முன்னாள் இராஜாங்க எஸ்.வியாழேந்திரனுக்கு இதன்போது வெளிநாட்டு பயணத் தடையும் விதிக்கப்பட்டது.