இலங்கையில் அமைதி வழியில் போராட்டம் நடத்துபவர்களுக்கு எதிராக வன்முறை -பெண்ணியக் கூட்டமைப்பு கண்டனம்

இலங்கையில் தற்போதைய ஆட்சியில் அமைதி வழியில் போராட்டம் நடத்துபவர்களுக்கு எதிரான வன்முறைகளை பொருளாதார நீதிக்கான பெண்ணியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டித்துள்ளது.

ஒரு தாயும் குழந்தையும்  காவல்துறையினரால் வன்முறையில் இழுத்துச் செல்லப்பட்டதை உலகம் திகிலுடன் கண்டதாகவும், கலவர நிலையில் முன்னேறிய காவல்துறையினரிடம் இருந்து  ஒரு தந்தை தனது குழந்தையுடன் பின்வாங்குவதாகவும்  பொருளாதார நீதிக்கான பெண்ணியக் கூட்டமைப்பு  தெரிவித்துள்ளது.

மேலும் அரசின் இத்தகைய சட்ட விரோதமான மற்றும் மிருகத்தனமான செயல்கள் அனைத்தையும் நிறுத்த வேண்டும் என்றும்  அமைதியான முறையில் போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்றும் பொருளாதார நீதிக்கான பெண்ணியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் செயற்பாட்டாளர்கள் சிலர் மாதிவெலவில் உள்ள தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு சென்று, காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளனர்.

காலிமுகத்திடலில் நேற்று இடம்பெற ஆர்ப்பாட்டத்தை கலைக்கச் சென்ற காவல்துறையினர் குழந்தைகள் மற்றும் சிறுவர்களை அச்சுறுத்தும் வகையிலும் வன்முறையாக நடந்து கொண்டமை தொடர்பிலும் விசாரணை நடத்துமாறு கோரி இவர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.