நாட்டில் தற்போதுள்ள எரிபொருள் ஒதுக்கீட்டு அளவை மாற்றாமல், விநியோக முறையை மேம்படுத்துவதன் மூலம் எரிபொருள் வரிசைகளைக் குறைக்க முடியும் என்று வெரிட்டே ரிசர்ச் (Verité Research) நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் நிஷான் டி மெல் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிப்பதை விட, விநியோகத் திறனை அதிகரிப்பதிலேயே கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இதற்காக அவர் மூன்று முக்கிய பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளார்.
முதலாவதாக வாகனங்களின் இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்தை அன்றைய திகதியுடன் ஒப்பிட்டு, குறிப்பிட்ட நாட்களில் மட்டும் எரிபொருள் வழங்கும் முறையை அறிமுகப்படுத்துதல். இது நடைமுறைப்படுத்த எளிதானது மற்றும் புரிந்துகொள்ளக் கூடியது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாவதாக தற்போது வாரத்திற்கு ஒருமுறை எரிபொருள் பெறும் முறையை மாற்றி, 10 நாட்களுக்கு ஒருமுறை என கால எல்லையை நீடித்தல். இதன் மூலம் எரிபொருள் நிலையங்களுக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை குறைந்து, நெரிசல் குறையும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மூன்றாவதாக எரிபொருள் நிலையங்களுக்கு வரும் தடவைகளைக் குறைக்கும் அதேவேளை, ஒரு தடவையில் வழங்கப்படும் எரிபொருள் அளவை அதிகரித்தல். இதன் மூலம் நுகர்வோருக்குக் கிடைக்க வேண்டிய மொத்த எரிபொருள் அளவு மாறாது, ஆனால் அவர்கள் வரிசையில் நிற்கும் நேரம் கணிசமாகக் குறையும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கூடுதல் எரிபொருள் விநியோகம் இன்றி, இருக்கும் வளங்களைக் கொண்டே தற்போதைய நெருக்கடியைச் சமாளிக்க இந்த நடவடிக்கைகள் உதவும் என்று நிஷான் டி மெல் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை வாகன இலக்க தகடுகளில் உள்ள இறுதி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருளை வழங்கும் முறைமையும் தற்போது அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.



