தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல திரைப்பட பின்னணிப் பாடகி வாணி ஜெயராம்(வயது 78) காலமானார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் பாடகி வாணி ஜெயராம் தவறி விழுந்ததில் உயிரிழந்தாக அவரது நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.
971ல் பாடத் தொடங்கிய வாணி ஜெயராம், இதுவரை 10,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். தமிழ், இந்தி, ஒடிசா, தெலுங்கு, கன்னடம் உட்பட 19 மொழிகளில் பாடல்களைப் பாடியுள்ளார். அவர் தீர்க்கசுமங்கலி படத்திற்காக பாடிய ‘மல்லிகை என் மன்னன் மயங்கும்’ பாடல் மிகவும் பிரபலமான பாடல்களில் ஒன்று.
அதே போன்று தமிழீழ விடுதலைப்பாடல்கள் சிலவற்றை அவர் பாடியுள்ளார். அதில் தியாக தீபம் திலீபன் அவர்களுக்காக பாடிய “பாடும் பறவைகள் வாருங்கள்“… என்ற பாடல் ஈழ வரலாற்றுப் பாடல்களில் தமிழ் மக்கள் மனங்களில் நீங்காத இடத்தைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பாடகி வாணிஜெயராம் மறைவு குறித்து இசையமைப்பாளர் சத்தியன் அவர்கள் தனது முகநுாலில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்,
“வாணிஜெயராம்,
இவரின் இசைப்பாரம்பரியம், வித்துவம் பற்றி பேசவேண்டிய தேவை இருப்பதாய் தெரியவில்லை. அப்படி செய்வது…. நான் கூவித்தான் பொழுது விடிகிறது என்ற சேவலின் நிலைக்கு ஒப்பானது.
இவரின் ஆளுமை, பண்பை நாம் கற்றுக்கொள்வதே அவருக்குச் செய்யும் இறுதி மரியாதை…. ஓம் சாந்தி.
“கானக்குயில்” திருமதி.வாணிஜெயராம் அம்மையார் அவர்கள் பலதடவைகள் இலங்கைக்கு இசைவிஜயம் செய்தவர்.
1980 களில் முதன் முறையாக இலங்கை வந்திருந்தார். அப்போது மிகப் பிரபலமான இலங்கையின் முதலாவது தமிழ் இசைக்குழுவான “கண்ணன்-நேசம்” இரட்டையர்களின் இசையில் பெரும் நிகழ்ச்சியொன்று தெற்கில் இடம்பெற்றது. கொழும்பு BMICH அரங்கில் ஒரு நிகழ்விலும் கண்டியில் ஒரு நிகழ்விலும் பாடகியாக கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் நாற்பது பாடல்களை முழுமையான பின்னணி இசை, இசைக்கலைஞர்களுடன் இணைத்து இசைக்கப்பட்டிருந்தது. இந்த நாற்பது பாடல்களையும் “கான இசைக்குயில்” வாணிஜெயராம் அம்மையார் மட்டுமே பாடி அசத்தினார். ஆண் குரல் இணைந்த சில பாடல்களுக்கு அப்போது “இசைவாணர்” கண்ணனின் இசைக்குழுவில் பிரபலமான பாடகர் ஸ்ரனி சிவானந்தன் அவர்கள் குரல் தந்திருந்தார்.
அதே நேரத்தில்,
Dr.இந்திரகுமார் என்பவரால் ஈழத்து திரைப்படமொன்றை தயாரிக்கும் நோக்கில் வாணிஜெயராம் அம்மையாரின் குரலில் ஒரு பாடலை கண்ணன்-நேசம் இரைட்டையர்கள் இசையமைத்திருந்தனர். அது ஒலிப்பதிவும் செய்யப்பட்டிருந்தது. இதற்கு ஈழத்தின் சிறந்த கலைஞர்கள் பலர் பங்கேற்றிருந்தனர். அவர்களில் றொக்சாமி மாஸ்ரர், மோகன்ராஜ், சந்தானம் மற்றும் சிங்கள இசைக்கலைஞர்கள் ஒலிப்பதிவில் பங்கெடுத்திருந்தனர். கால நெருக்கடிகள் காரணமாக அத்திரைப்படம் தயாரிக்கப்படாமலேய கைவிடப்பட்டது.
வாணி அம்மையார் அவர்கள் ஈழத்தமிழர்களின் விடுதலைப் பாடல்களிலும் தன் முத்திரையைப் பதித்தவர். இந்தியாவில் விடுதலைப் பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்ட காலத்தில் வாணி அம்மையார் ஒரு பாடலை பாட அழைக்கப்பட்டிருந்தார். பாடலை பாடிய பின்னர் குரல் பதிவு அறையிலிருந்து வந்து, தான் பெற்றுக்கொண்ட பணத்தொகையை அப்படியே திருப்பி கொடுத்துவிட்டு, கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்தபடி, கைகூப்பி வணக்கம் செய்து, அமைதியாய்ச் சென்றதாக கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் சொல்லியிருக்கிறார்.
இசைக்குயில் அவர்கள் ஆன்மீக நாட்டமும் இசையினூடான இறைபக்தியும் கொண்டவர். அதற்கு அவரது பக்தி, பஜனை பாடல்கள் சான்று.
ஒரு முறை காதின் வழி நுழைந்தால் மனதால் மறக்க இயலாத ஒலி நயம் கொண்ட வசீகரக் “குரலழகி.”
இயற்கையின் கொடையில் விளைந்த இசை வல்லமை”.