அனைவருக்கும் 2026ம் ஆண்டு பாதுகாப்புடன் கூடிய அமைதியையும் வளர்ச்சிகளையும் பெற அவர்கள் உழைக்கும் ஆண்டாக மலர இலக்கு ஆசிரியக்குழு முதலில் வாழ்த்துகிறது.
உலகத்தைப் பொறுத்த மட்டில் 2026ம் ஆண்டு பிறக்கும் பொழுது பன்முனைவாக்கம் கொண்ட புதிய உலக அரசியல் முறைமையையே நடைமுறையாகியுள்ள நிலையில் இந்த முனைவாக்கச் சிதறல் முரண்பாடுகளையும் வல்லாண் மைகளின் பேராசைகளையும் பெருகவைத்துப் புதிய காலத்தை பாதுகாப்பின்மையை அனுபவிக்க வைக்கும் காலமாகப் பிறக்க வைத்துள்ளது. ஒஸ்லோவில் உள்ள அமைதிக்கான ஆய்வு நிறுவனம் 1946ம் ஆண்டில் இருந்ததை விட 2024இல் என்று மில்லாத அளவுக்கு அரசுசார்ந்த முரண்பாடுகள் அதிகரித்துள்ளன என ஆய்வு செய்துள்ளது. ஒக்டோபர் காசா அமைதிப் பிரகடனம் அங்கு பகுதியளவில் நிவாரணங்களை வழங்கும் என அறிவித்த போதிலும் உடலைப்பாதுகாக்க ஆடைகள், தங்கிடங்கள், உணவுகள், மருத்துவம் வைத்திய முறைமைகள் எதுவுமின்றி மாரிக்குளிரில் சித்திரவதையினை அனுபவிக்கும் மக்களாகவே அங்குள்ள சிறுவர்கள் முதல் முதியவர் வரை மரணத்துடன் போராடும் பரிதாபத்தை உலகம் கண்டு இரசித்துக் கொண்டிருக்கிறது.
உக்ரேனில் ரஸ்ய எல்லைப்பகுதிகளில் இராணுவத்தை விலக்கி முக்கிய அணுவுலைகளை மற்றும் கனிமவளப் பிரதேசங்களை ரஸ்ய உக்ரேன் கூட்டு முகாமைத்துவத்தில் முன்னெடுக்க வல்ல 20 அம்ச அமைதிக்கான முன்மொழிவொன்றை அமெரிக்க ஐரோப்பிய அழுத்தங்களுக்கு வளைந்து கொடுத்து உக்ரேன் சனாதிபதி வெளியிட்டுள்ள நிலை காணப்படுகிறது. சூடானில், அவுஸ்திரேலிய பொன்டி கடற்கரையில், எனப் பலநாடுகளில் பலநிகழ்வுகளில் மனிதாயம் கண்முன்னால் சாகடிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நேரத்திலேயே புதிய ஆண்டு பிறக்கிறது.
ஐரோப்பாவில் 1980ம் ஆண்டு காலப் பனிப்போரின் பின்னர் ரஸ்யாவின் புதிய தொழில்நுட்ப புனரமைப்புடனான கலப்புப் போர்முறையால் “ நிச்சயமற்றதன்மையின் காலம்” கட்டமைக்கப்பட்டு வருவதை பிரித்தானியாவின் எம்16இன் தலைவி பிளய்சி மெட்ரிவெளி அவர்களது கன்னியுரை சுட்டிக்காட்டியுள்ளது. அதே நேரத்தில் நேட்டோவின் செயலாளர் நாயகம் மார்க் ரூட்டி அவர்கள் ரஸ்யா ஐந்து வருடத்துக்குள் ஐரோப்பாவைத் தாக்கும் என்று எச்சரிப்பை அவரது ஆண்டிறுதி உரையில் எடுத்துரைத்துள்ளார். ஆயினும் மனித எதிர்காலம் வளமாக இருக்கும் என்னும் நம்பிக்கையை தன்னலமற்ற முறையில் பொன்டிக் கடற்கரைத் தாக்குதலை நடத்தியவரை வெறுங்கையுடன் எதிர்கொண்டு போராடி மக்களைப் பாதுகாத்த பொரிஸ் சோவ்வியா குருமன் என்ற யூதத் தம்பதியினரும், அகமட்- அல்- அகமட் என்ற முஸ்லீம் பெருமகனும் உலகுக்கு அளித்துள்ளனர்.
இவற்றை தனது கிறிஸ்மஸ் பருவகாலம் என்கின்ற புத்தாண்டுக்கு முன்னான காலம் குறித்து பிரித்தானியாவின் ஆங்கில நாளிதழான “த கார்டியன்” தனது ஆசிரியப் பார்வையில் “ பாதிப்புற்றுள்ள உலகம் அமைதியை நம்பிக்கையை நல்லெண்ணத்தை தரவல்ல செய்திகளே உலகுக்குத் தேவையாக உள்ளது” என்ற படைப்பில் சுட்டிக்காட்டியுள்ளது. “எங்களுக்கு நம்பிக்கை கொள்வதற்கான உரிமையுள்ளதா? ஏன்று கிறிஸ்தவ இறையியலாளரும் தத்துவாசிரியருமான போல் டிலிச் அவர்கள் ஹவார்ட் பார்வையாளர்களிடை எழுப்பிய கேள்வியுடன் தொடங்கிய இந்த ஆசிரியப் பார்வை “யாருமே நம்பிக்கையற்றவர்களாக வாழ இயலாது. துன்பமான ஒடுக்கமான பாதைகளின் வழி வாழ்வு பயணிப்பதாக இருந்தபோதிலும் அதனைத் துணிவாக எதிர்கொண்டு வாழ வேண்டும்” என்கிற கருத்தை இந்த ஆய்வு பதிவிட்டுள்ளது. இதனையே இலக்கும் தனது எதிர்வரும் ஆண்டுக்கான எண்ணமாகப் பதிவிட விரும்புகிறது.
ஈழத்தமிழரைப் பொறுத்த மட்டில் 2026ம் ஆண்டு ஈழத்தமிழர் இறைமையை மீளுறுதி செய்ய வட்டுக்கோட்டைத் தீர்மானம் பிறப்பிக்கப்பட்ட பொன்விழா ஆண்டாக மலருகிறது. இந்நேரத்தில் இந்த வட்டுக்கோட்டைத் தீர்மானம் அடுத்த ஆண்டிலேயே 1977இல் மக்களாணையைப் பெற்றுவிட்ட போதிலும் கடந்த 50 ஆண்டுகளில் 1978க்கும் 2009க்கும் இடைப்பட்ட 31 ஆண்டுகளில் ஈழத்தமிழர்கள் கட்டமைத்த தமிழீழ அரசு என்னும் நடைமுறையரசுக்காலத்தை விட ஏனைய 19 ஆண்டுகளும் ஈழத்தமிழரின் பாராளுமன்ற அரசியல் கட்சிகளின் கையாலாகாத் தனத்தையே இதனை நடைமுறைப்படுத்துவதில் உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளது என்பது வரலாறாக உள்ளது.
இதற்கான முதற்காரணம் 1977 பொதுத்தேர்தலில் வெற்றி பெறும் தமிழ்ப்பிரதிநிதிகள் சிலோனின் தேசிய அரச சபைக்குச் செல்லாது தமிழீழத்தின் சுதந்திரத்தை உறுதி செய்வதற்கான தமிழீழ தேசிய அரசசபையை அமைத்து அதன் அரசியலமைப்பை அமைதி வழியிலோ அல்லது நேரடியான செயல்கள் வழியாகவோ அல்லது போராட்டத்தின் வழியாகவோ நடைமுறைப்படுத்துவோம்” என்றே தமிழர் விடுதலைக்கூட்டணியினர் தமது தேர்தல் கொள்கைத் திரட்டில் அளித்த வாக்குறுதியைத் தேர்தல் வெற்றியின் பின்னர் நிறைவேற்றாமையே என்பதாக உள்ளது.
இன்று 50 ஆண்டுகள் சென்ற நிலையிலும் 1976ம் ஆண்டின் வட்டுக்கோட்டைத் தீர்மானம் 1977ம் ஆண்டின் மக்கள் குடியொப்பத்தின் வழி மீளவும் ஒரு சுதந்திரமான மக்கள் குடியொப்பத்தின் மூலமே அதனை மாற்ற முடியும் என்கின்ற வரலாற்று உண்மையை இன்றைய ஈழத்தமிழ் அரசியல்வாதிகளே மறுத்து அல்லது மறைத்து அல்லது மறந்து செயற்படுகின்றனர். இன்று ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் சிறிலங்காவின் ஏக்கிய இராஜ்ஜிய புதிய அரசியலமைப்பில் ஈழத்தமிழர் என்னும் இறைமையும் தன்னாதிக்கமுள்ள தேச இனத்தைச் சமுகமென்றாக்கி அந்தச் சமுகம் சிங்கள பௌத்த நாட்டில் சிங்கள தேசத்தின் வடக்கில் கிழக்கில் வாழும் சிங்கள அரசால் சலுகைகள் அளிக்கப்பட வேண்டிய சமுகமாக வாழ வைக்க முயற்சிக்கின்றனர்.
இதனை தாங்கள் தடுப்பதற்கு இந்திய மத்திய அரசின் உதவியைக் கோர வேண்டும் என்கின்ற தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் இதற்காகத் தமிழக மாநில அரசின் உதவியையையும் அங்கு சென்று கோரினர். ஆனால் இந்திய வெளிவிவகார அமைச்சர் முனைவர் ஜெய்சங்கர் அவர்களின் கடந்த வார இலங்கை வருகையின் பொழுது கொழும்பு இந்தியத்தூதரகத்தில் அவரைச் சந்தித்த ஈழத்து அரசியல் வாதிகள் யாருமே ஈழத்தமிழரின் தேசிய பிரச்சினைக்கு வட்டுக்கோட்டைத் தீர்மான அடிப்படையில் தீர்வினைக் கோராது, 1978 முதல்இதுவரை ஈழத்தமிழர்களுக்கான தன்மான வாழ்வை எவ்விதத்திலும் ஏற்படுத்தாத தாளில் வெற்றுச் சட்டமாக உள்ள சிறிலங்காவின் அரசியலமைப்பின் 13 வது சட்டத்தை நடைமுறப்படுத்தி மாகாணசபை தேர்தலை நடாத்தும்படி மட்டுமே கோரியுள்ளனர்.
இது சிறிலங்காவின் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிய அரசியலமைப்பை அதற்கு ஏற்றமாதிரி கட்டமைப்பதற்கான கால அவகாசத்தை அளிப்பதற்கான ஈழத்தமிழ் அரசியல்வாதிகளின் தந்திரோபாய செயற்பாடென்றே இலக்கு கருதுகிறது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் தமிழகத்திலும் இறைமையுடன் கூடிய சமஸ்டி என்பதையே கோரினர் வெளிவிவகார அமைச்சரிடம் அதனை ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் கோரவில்லையெனக் கண்டனமும் தெரிவித்துள்ளனர். இது ஆரோக்கியமான ஒன்றாக இருப்பினும் இறைமையுடன் கூடிய சமஸ்டி என்பது குறித்து அவர்கள் தெளிவாக்க வேண்டிய தேவை உள்ளது என்பதை இலக்கு வலியுறுத்திக் கூற விரும்புகிறது.
அதே வேளை இலங்கையில் சீர்குலைந்து வரும் சிறுபான்மையின அரசியல் போக்குத் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியின் கீழ் “ சர்வதேச சிறுபான்மையினக்குழு” வினர் வெளியிட்டுள்ள 50 பக்க ஆய்வறிக்கையில் 13வது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுதலையே புதிய அரசியலமைப்புக்கான அவர்களின் முன்மொழிவாக அமைத்துள்ளனர். ஈழத்தமிழர்களின் இறைமை நீக்கத்தைத் தொடர்ந்து அவர்களின் தேசிய நீக்கத்தை பலவழிகளில் பலரும் முன்னெடுப்பதற்கு இந்த அறிக்கையும் சான்றாகிறது.
இந்நிலையில் ஈழத்தமிழரின் அரசியல் எதார்த்தம் குறித்த அறிவூட்டல் 2026ம் ஆண்டுக்கான முதன்மைத் தேவையாகிறது. இதனை மாநாடுகள் கருத்தரங்குகள் வழியாக ஈழத்தமிழர் தாயகத்திலும் உலகெங்கும் செய்விக்க வேண்டிய பொறுப்பு உலகத் தமிழினமாகவுள்ள ஈழத்தமிழர்களுக்கு உண்டு என்பதையே 2026ம் ஆண்டுக்கான செய்தியாக இலக்கு இவ்வாரத்தில் முன்வைக்க விரும்புகிறது. தமிழகத்தில் 2026 சட்டசபைத் தேர்தல ஆண்டாக இருப்பதால் அங்கும் அதற்கேற்றவகையில் கருத்தரங்குகள் காலத்தின் கட்டாயமாகிறது. அடுத்து செயற்திட்டங்கள் அதற்கான செயலணிகள் உருவாக்கத்தின் வழியாகவே ஈழத்தமிழரின் சிதைந்து போன ஒருமைப்பாட்டை மீள்கட்டமைக்க வேண்டும் என்பதையும் இலக்கு மீளவும் பதிவுசெய்ய விரும்புகிறது.
ஆசிரியர்




