தெளிவுத்தன்மை தான் நம்பிக்கையை உருவாக்கும் அடித்தளம் என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில், அமெரிக்காவின் மொண்டானா தேசிய காவல் படைக்கும இலங்கை பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றுக்கிடையிலான பாதுகாப்பு பங்காண்மையினை உத்தியோகபூர்வமாக முறைப்படுத்தும் வகையில், (State Partnership Program – SPP) தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) நவம்பர் 14ஆம் திகதி கைச்சாத்தானது.
இந்த ஒப்பந்தம் இன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. இது குறித்து அமெரிக்கத் தூதர் ஜூலி சங் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,
இரு தரப்புகளுக்கும் இடையிலான இந்த ஒத்துழைப்பு, வெளிப்படைத்தன்மை மற்றும் பரஸ்பர நம்பிக்கையை மேம்படுத்துவதற்கான எங்களது உறுதியை வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது. இது குறித்து நாம் பெருமையடைகின்றோம்.
இந்த கூட்டாண்மையின் மூலம் அபாய மேலாண்மை மற்றும் பேரிடர் மீட்பு, கடல் பாதுகாப்பு, தொழில்முறை இராணுவப் பயிற்சிகள் மற்றும் பரிமாற்றங்கள் ஆகிய துறைகளில் இருதரப்புகளுக்கும் பயனளிக்கும் வகையில் புதிய ஒத்துழைப்புகள் விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
State Partnership Program திட்டத்தின் மூலம் ஏற்படும் இத்தகைய விரிவான ஒத்துழைப்பு இரு நாடுகளுக்கும் மட்டுமல்லாமல், மேலும் பாதுகாப்பான இந்தோ–பசிபிக் பிராந்தியத்தை உருவாக்கவும் உதவும் என குறிப்பிட்டுள்ளார்.


