அமெரிக்க சிறப்புத் தூதுவருடன் கடல்சார் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடல்!

தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க சிறப்புத் தூதுவர் செர்ஜியோ கோர் (Sergio Gor), நேற்று (20) கொழும்பு துறைமுகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

பிராந்திய ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த கடல்சார் வர்த்தகப் பாதைகள் மற்றும் துறைமுகச் செயல்பாடுகளை நேரில் கண்டறியும் நோக்கில் இந்த விஜயம் அமைந்திருந்ததாக அவரது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விஜயத்தின் போது, இலங்கை துறைமுக அதிகாரசபையின் தலைவருடன் இணைந்து துறைமுகத்தின் பல்வேறு செயல்பாடுகளை அவர் நேரில் பார்வையிட்டார். குறிப்பாக, சர்வதேச வர்த்தகத்தைப் பாதுகாப்பாக முன்னெடுப்பதில் கடல்சார் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து அதிகாரிகளுடன் அவர் விரிவாகக் கலந்துரையாடினார்.

தெற்காசியாவை உலகச் சந்தைகளுடன் இணைக்கும் மிக முக்கியமான ஒரு மையமாக கொழும்பு துறைமுகம் விளங்குவதை அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

அமெரிக்கா மற்றும் இலங்கை இடையிலான வலுவான கூட்டாண்மை மூலம், பாதுகாப்பான மற்றும் வெளிப்படையான வர்த்தகச் சூழலை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

துறைமுகத்தின் செயல்திறனை உயர்த்துவதும், சர்வதேச விநியோகச் சங்கிலியின் நம்பகத்தன்மையைப் பாதுகாப்பதும் உலகளாவிய ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்தார்.

குறிப்பாக, இத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகள் அமெரிக்க உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோரின் பொருளாதார நலன்களுடன் நேரடித் தொடர்புடையது என்பதையும் அவர் தனது உரையாடலின் போது குறிப்பிட்டார்.

இந்தப் பயணத்தின் மூலம், இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் பாதுகாப்பான கடல்சார் வர்த்தகத்தை உறுதிப்படுத்துவதற்கான இருதரப்பு ஒத்துழைப்புகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.