வெனிசுவேலாவிற்கு எதிரான அமெரிக்காவின் இராணுவத் தலையீட்டை கடுமையாகக் கண்டித்து, வொஷிங்டன் இறையாண்மையை மீறுவதாக மக்கள் விடுதலை முன்னணி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை (04) மக்கள் விடுதலை முன்னணி அறிக்கையொன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையில்,
சுதந்திரமான, இறைமையுள்ள நாடான வெனிசுவேலாவுக்குள் அத்துமீறி நுழைந்து, அங்கு மக்கள் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியைக் கடத்திச் சென்று, அமெரிக்கா வெனிசுலாவுக்கு எதிராக மேற்கொண்ட இராணுவ ரீதியிலான ஆக்கிரமிப்புத் தலையீட்டை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
உலகின் எந்தவொரு சுதந்திர, இறைமையுள்ள நாட்டைப் போலவே வெனிசுவேலாவினதும் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் மற்றும் ஆட்சியாளர்கள் யார் என்பதைத் தீர்மானிக்கும் இறைமை அதிகாரம் அந்நாட்டு மக்களுக்கே உரியது. அதனை மீறுவதற்கு எந்தவொரு வல்லரசுக்கும் உரிமை இல்லை.
நவீன சமூகமும், அரச நிர்வாகமும் மிகவும் பண்பட்டதாக இருக்க வேண்டும் என்பது பொதுவான நம்பிக்கையாகும். ஜனநாயகம், மனித உரிமைகள், நாடுகளின் சுதந்திரம் மற்றும் இறைமை என்பன உலகமே ஏற்றுக்கொள்ளும் கோட்பாடுகளாகும். எந்தக் காரணத்திற்காகவும் அவற்றை மீறி, நாடுகளுக்குள் இராணுவத் தலையீடுகள் அல்லது ஆக்கிரமிப்புகளை மேற்கொள்வது நவீன நாகரிக உலகில் நியாயமானதல்ல.
இத்தகைய சூழ்நிலையில், அமெரிக்காவினால் வெனிசுவேலாவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பலவந்தமான இராணுவத் தலையீட்டை உலகில் எவரும் அங்கீகரிக்க மாட்டார்கள் என நாம் உறுதியாக நம்புகிறோம்.
எனவே, அமெரிக்கா வெனிசுலாவுக்கு எதிராக மேற்கொண்ட இந்த இராணுவ ஆக்கிரமிப்பைக் கண்டிக்கும் மக்கள் விடுதலை முன்னணியினரான நாம், வெனிசுவேலாவின் இறைமை மற்றும் சுதந்திரத்திற்காகக் குரல் கொடுக்கின்றோம் எனக் குறிபிட்டுள்ளது.



