இலங்கைக்குப் பயணிக்கும் அமெரிக்கப் பிரஜைகள் “அதிகரித்த எச்சரிக்கையுடன்” இருக்குமாறு அறிவுறுத்தல்

இலங்கைக்குப் பயணிக்கும் அமெரிக்கப் பிரஜைகள் “அதிகரித்த எச்சரிக்கையுடன்” இருக்குமாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தனது பயண ஆலோசனையை (Travel Advisory) புதுப்பித்துள்ளது.

நாட்டில் நிலவும் போராட்டங்கள், பயங்கரவாதம் மற்றும் நிலக்கண்ணி வெடிகள் காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆலோசனையின் நிலை அளவில் மாற்றம் இல்லை என்றாலும், ” ஏனைய அபாயங்கள்” என்ற புதிய குறியீடு சேர்க்கப்பட்டுள்ளதுடன், சுருக்கக் கருத்துரையும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

1. போராட்டங்கள் (Demonstrations)

இலங்கையின் பொருளாதார மற்றும் அரசியல் சூழ்நிலை தொடர்பாக ஆர்ப்பாட்டங்கள் எப்போது வேண்டுமானாலும் நடைபெறலாம்.போராட்டக்காரர்களைக் கலைக்க பொலிஸார் நீர்த்தாரைகள் மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தியுள்ளனர். இதனால், அமைதியான கூட்டங்கள் உட்பட அனைத்துக் கூட்டங்களையும் தவிர்க்கவும். போராட்டங்கள் சிறிய அல்லது எந்தவிதமான முன் அறிவிப்பும் இன்றி வன்முறையாக மாறக்கூடும்.

2. பயங்கரவாதம் (Terrorism)

இலங்கையில் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்துள்ளன. தாக்குதல்கள் பின்வரும் இடங்களைக் குறிவைக்கலாம்:

* சுற்றுலாத் தளங்கள்

* போக்குவரத்து மையங்கள்

* சந்தைகள் மற்றும் வணிக வளாகங்கள்

* அரச கட்டிடங்கள்

* உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள்

* பாடசாலைகள், வைத்தியசாலைகள் மற்றும் விமான நிலையங்கள்.

தொலைதூரப் பகுதிகளில் உள்ள அமெரிக்கப் பிரஜைகளுக்கு அவசரகாலச் சேவைகளை வழங்குவதற்கான அமெரிக்க அரசாங்கத்தின் திறன் வரையறுக்கப்பட்டுள்ளது.

3. நிலக்கண்ணி வெடிகள் (Landmines)

இலங்கையில் சுமார் 23 சதுர கிலோமீற்றர் பரப்பளவில் உள்நாட்டுப் போரினால் எஞ்சிய நிலக்கண்ணி வெடிகள் உள்ளன. பெரும்பாலான கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுவிட்டாலும், வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் சில இடங்கள் இன்னும் அபாயகரமானவை. அதிகபட்ச நிலக்கண்ணி வெடிகள் வடக்கு மாகாணத்தின் வடக்கு மாவட்டங்களில் குவிந்துள்ளன. அபாயம் உள்ள பகுதிகளை, குறியீடு கொண்ட எச்சரிக்கை பலகைகள் மூலம் குறிக்கப்பட்டுள்ளன. வெள்ளைக் குறியீடுகள் கண்ணிவெடி அகற்றப்பட்ட நிலத்தைக் குறிக்கின்றன.

பயணிகளுக்கான வழிகாட்டுதல்கள்

இலங்கைக்குப் பயணிக்கத் திட்டமிடும் அமெரிக்கப் பிரஜைகளுக்கு பின்வரும் பரிந்துரைகளை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வழங்குகிறது:

* பயங்கரவாத வன்முறை அபாயம் இருப்பதால் எச்சரிக்கையுடன் செயற்படவும்.

* வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில், குறிப்பாக வடக்கு மாகாணத்தின் வடக்கு மாவட்டங்களில், பயன்பாட்டில் உள்ள வீதிகள், தடங்கள் மற்றும் பாதைகளைத் தவிர்த்து வேறு இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கவும்.

* சுற்றுலாத் தளங்களுக்கும், மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களுக்கும் செல்லும் போது சுற்றுச்சூழல் குறித்து விழிப்புடன் இருக்கவும்.

* உள்ளூர் அரசியல் நிலைமை தொடர்பான பேரளவிலான ஆர்ப்பாட்டங்கள் சிறிய அறிவிப்புடன் நடைபெறலாம். அவை போக்குவரத்து மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு இடையூறு ஏற்படுத்தலாம்.

* ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கூட்டங்களைத் தவிர்க்கவும்.

* உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும்.

* அவசரச் செய்திகளுக்கு  உள்ளூர் ஊடகங்களைக் கண்காணித்து, தேவைப்பட்டால் உங்கள் திட்டங்களை மாற்றியமைக்கத் தயாராக இருக்கவும்.

* அமெரிக்கத் தூதரகம் அல்லது துணைத் தூதரகத்திலிருந்து முக்கிய அறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கைகளைப் பெற Smart Traveler Enrollment Program (STEP) இல் பதிவு செய்யவும்.

* பயணத்தின் முன் பயணக் காப்பீடு வாங்குவது மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது.