இராணுவத்தின் வசமுள்ள துயிலும் இல்லங்கள் விடுவிக்கப்பட வேண்டுமென பாராளுமன்றில் வலியுறுத்தல்

வடக்கு, கிழக்கில் இராணுவ வசம் உள்ள துயிலும் இல்லங்கள் விடுவிக்கப்பட்ட வேண்டும் என்றும் அதனை முழுமையாக மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

மக்கள் சுயாதீனமாக நினைவுகூர அரசாங்கம் வழிவகுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இன்றைய (13) பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு, கிழக்கில் 32க்கும் மேற்பட்ட துயிலும் இல்லங்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இன விடுதலைக்காக போராடியவர்களின் நினைவான துயிலும் இல்லங்களைப் பாதுகாக்க வேண்டிய கடப்பாடு உள்ளதாக கோடீஸ்வரன் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் தங்களுடைய இனம் மற்றும் மதம் சார்ந்து மட்டுமே சிந்திப்பவர்களாக உள்ளனர் என்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

பௌத்தத்தை முன்னிலைப்படுத்திப் புத்தசாசன அமைச்சை மாத்திரமே உருவாக்கியுள்ளதாகவும் ஏனைய மதங்களையும் இனங்களையும் முன்னிலைப்படுத்தி எந்தவொரு அமைச்சையும் உருவாக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதனைப் பார்க்கும் போது அனைவரும் “ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்” போலவே செயற்படுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் விமர்சித்தார்.