சீரற்ற காலநிலை: பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் கோரிக்கை!

இலங்கை  நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக சற்றுமுன் மாலை சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலை இன்று(25) முதல் எதிர்வரும் 27ஆம் திகதி வரை தொடரும் எனவும் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் வளிமண்டவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அடுத்த 24 மணித்தியாலங்களில் வட மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு அறிவித்தல் விடுத்துள்ளது.

அத்துடன், வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என திணைக்களம் எச்சரித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மத்திய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி உள்ளதால் இந்த நிலை ஏற்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும், ஏதேனும் அவரச உதவிகள் தேவைப்படும் பட்சத்தில் அருகில் இருக்கும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துக்கு தொடர்புகொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் வானிலை தொடர்பான விடயங்கள் வளிமண்டலவியல் திணைக்களத்தால் அவ்வப்போது வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட தொகுதியின் தாக்கம் காரணமாக, நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்குமாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.