இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையால் 03 மாகாணங்களைச் சேர்ந்த 15,622 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
வட மாகாணத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, யாழ்ப்பாணத்திர் 7,025 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 29 வீடுகள் சேதமடைந்துள்ளன.
மேலும் கிளிநொச்சி மாவட்டத்தில் 365 பேரும், மன்னார் மாவட்டத்தில் 7,854 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் 122 குடும்பங்களைச் சேர்ந்த 399 பேர் நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அனரத்த நிலைமைகளை கருத்திற்கொண்டு மரங்களின் கிளைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் பிரதீப் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டோர் இடம்பெயரும் நிலை ஏற்படுமாயின் 03 நாட்களுக்கு தொடர்ச்சியான உணவு வழங்குதற்கும் அதன் பின்னர் தேவைக்கேற்ப உணவு வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அனரத்த நிலைமைகளை கருத்திற்கொண்டு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தென்மேற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்பதால் இந்தியாவின் தமிழ்நாட்டில் எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி பலத்த மழை வீழ்ச்சி பதிவாக கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



