‘ஊன்றுகோல்’ நாவல் : மருத்துவர் சுஜோவின் எழுத்து வாக்கு மூலம்

500 Views

'ஊன்றுகோல்' நாவல்

‘ஊன்றுகோல்’ நாவல்: 20.02.22 அன்று சென்னையில்  நூலசிரியர்  சுருதி (போராளி மருத்துவர் சுஜோ) அவர்களின்   ‘ஊன்றுகோல்’   நாவலை ஓவியர் புகழேந்தி அவர்கள் வெளியீட்டு வைத்தார்.

இது ஒரு கதையில்லை; நாங்களும், எங்கள் சனங்களும் கடந்து வந்த துயரம் நிறைந்த, அர்ப்பணிப்பு மிக்க வாழ்வின் வாக்கு மூலம்…

இந் நாவலில் இறுதிப் போரும் ம(று)றைக்கப்பட்ட உயிரைப் பிழியும் உண்மைகளையும் கூடவே பதிவு செய்திருப்பதால், இது போர்க்கால  இலக்கியங்களில் காத்திரமான ஆவணமாகவும் அமைகின்றது.  இந் நூலின் ஆசிரியர் சுருதி. இவர்  வேறுயாரும் இல்லை. வைத்திய கலாநிதி சுஜந்தன் அல்லது சுஜோ என்று தமிழீழ  மக்களாலும் போராளிகளாலும் நன்கு அறியப்பட்டவர்.

தமிழீழ மருத்துவத் துறையில் இவர் ஆற்றிய பணி மகத்தானது. மூத்த மருத்துவர்களில் ஒருவராக இருந்து விடுதலைப்புலிகளின்  மருத்துவமனைகளிலும், அரச மருத்துவமனைகளிலும் காலத்திற்கேற்ப பல பொறுப்பு நிலைகளிலிருந்து பணியாற்றியவர்.

2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் இறுதி நாள் வரை அந்த மண்ணில் மருத்துவராக, அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர். மருத்துவர் சுருதி  அசாதாரண மனிதநேயம் கொண்டவர். அன்பினால் அனைவரையும் அரவணைத்து வழி நடத்தும் சிறப்பு அவருக்கே தனித்துவமானது. நோயாளிகள் மீதும் அளவற்ற  அன்பும் அக்கறையும்  கொண்டவர்.

IMG 20220217 WA0038 'ஊன்றுகோல்' நாவல் : மருத்துவர் சுஜோவின் எழுத்து வாக்கு மூலம்

நூலாசிரியர் எழுத்துலகிற்கு புதியவரல்ல; பல போர்கால இலக்கிய நூல்களை  ஏலவே படைத்திருக்கின்றார். இந் நூல், ஆசிரியரின் பத்தாவது பிரசவமாகின்றது.

கிளிநொச்சி மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரியாக இருந்த பொழுது எவ்வளவு வேலைப்பழுவின் மத்தியிலும் ‘விழி’ என்ற  மருத்துவ மாத சஞ்சிகையை வெளியிட்டு மக்களிடையே மருத்துவ விழிப்புணர்வை ஏற்பற்படுத்தியவர் 2008 கிளிநொச்சி நகர் இடப்பெயர்வு  நடைபெறும் மட்டும்  இச் சஞ்சிகை வெளியாகியது.

நூலாசிரியரின் சொந்த அனுபவங்களையும், போரின் எச்சங்களாய் எஞ்சியுள்ளவர்களின் மனங்களில் அழியாப்பதிவிலிருக்கும் துயர்களையும், இன்றும் தேடப்படும் நியாயங்களையும், தன்நிலை மாறாமல் தடங்கல் இன்றி பேச்சு வழக்கு சொல்லாடல்களை அதிகமாக நிரப்பி இந் நாவலை பதிவு செய்துள்ளமை சிறப்பாகின்றது .

யுத்தம் தந்த தோல்வி எதிர்பாராதது. விடுதலையை மிகுந்த நம்பிக்கையோடு எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு அது ஒரு பேரதிர்வு. அதை ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள் சமூகத்தில் இன்றும் உள்ளனர். அப்படியான ஒருவரின் பாத்திரம் தான்  இந்நூலில்  டாவின் விடுதலைப்புலிகள் ஏன் தோற்றார்கள்? இறுதிப்போரில் என்ன நடந்தது? என்பதை போல் இன்றும் எம் சமூகத்தில் விடை தெரியாத கேள்விகளிற்கான பதில்களையும் அழகாக நகர்த்தி செல்லும் பாங்கு எழுத்தாளன்  வாசகர்களின் மனங்களின் அருகிலிருக்கின்றான் என்பதை கோடிட்டுக் காட்டுகின்றது.

இங்கு  மிகைப்படுத்தப்பட்ட கதாபாத்திரங்கள் எவரும்  இல்லை. வார்த்தை  அலங்காரமும் இல்லை.  இயல்பான மொழிநடையில் அரசியல், சமூகக் கருத்துகளை  இறுக்கமாக்கி ஒரு சனநாயக சமூகத்தின் தவிப்பை தன் வார்த்தைகளால் விதைத்து, மானிட விடுதலையின் நேசிப்பை தன் எழுத்துகளால் நிரப்பிய படைப்பு இது  என்றால் மிகையாகாது. கரைசேரா காவியங்களும், தாய் நிலத்தை ஆழமாக நேசித்து அங்கு வாழமுடியாத புலம்பெயரியின் காயங்கள் எவ்வளவு வலியானது என்பதையும் எம் தேசத்தின் நினைவுகளுடன் தேம்பி, தேம்பி அப்படியே உப்பு நீர் சொட்ட சொட்ட வார்த்திருக்கின்றார்.

மனித மனதில் உயிர் மூச்சாக நம்பிக்கையும், அந்த நம்பிக்கையுடன் இறுதிவரை போரிட்டு மடிந்தவர்களின் தியாகங்களும் எம் நினைவில் வாழுமட்டும் எதையும் தாங்கிக் கொண்டு எழுத்து வரலாம் என்பது நூலாசிரியரது ஆசைக்க முடியாத நம்பிக்கை.

அதை தன் வாழ்வியலிலும் வரித்துக் கொண்டவர் என்ற வகையில்  இந்த படைப்பு இன்னும் உயிர் பெறுகின்றது. நாம் போருக்குள் வாழ்ந்து வந்த நாட்கள் ஓவ்வொன்றிலும் மறைக்கப்பட்ட வரலாறுகள் புதைந்து கிடக்கின்றது என்பதை நாம் கூறினால் அன்றி யார் அறிவார் .

வழிநெடுகலும் வலிகளையும் வரலாற்றையும் பதிவு செய்யும் இந்நூல் ஒரு காலத்தின்  காத்திரமான பதிவாகின்றது. இந் நூலை மருத்துவ போராளி சுதர்சனுக்கு சமர்பணம் செய்துள்ளார் நூலாசிரியர்.  2009 மே 17 ம் திகதி இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்பட்டு பின்பு இரண்டு நாட்கள் அதே இடத்தில் தடுத்து வைக்கப்பட்டு (19.05.2009) அன்று   இலங்கை இராணுவத்தினரின் பேரூந்தில் ஏற்றப்பட்டு  கொண்டு செல்லப்பட்டுள்ளார் சுதர்சன்.

அதன் பின்னர் இன்று வரை எங்கே? என்ன நடந்தது? என்று தெரியாமல், வலிந்து காணமல் ஆக்கப்பட்டவர்களில்  சுதர்சனும் ஓருவன். தமிழீழ சுகாதார சேவையின் ஒரு அங்கமாகிய பல்மருத்துவ சேவையில் சுதர்சன் ஒரு மைல் கல்லாக விளங்கியவர், பின்னாளில் தமிழீழத்தின் மூலை முடுக்கெங்கும் தலை சிறந்த பல் வைத்தியனாக அறியப்பட்டவன்.

எம் மண் சுமந்து நிற்கும் வலிகளின் பதிவேட்டை தந்த மருத்துவர்  சுருதி அவர்களிற்கு என் உளம் நிறைந்த பாராட்டுகள். இப்போது சென்னையில்  நடைபெறும் 49 ஆவது புத்தகக் கண்காட்சியில்  அரங்க எண் 506 இல்  இந்நூலைப் பெற்றுக்கொள்ளலாம் என்பது கூடுதல் தகவல் ஆகும்

மிதயா கானவி 

Tamil News

Leave a Reply