சீரற்ற வானிலை: 212 பேர் உயிரிழப்பு – 200க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக தகவல்!

இலங்கையில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 212 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், 218 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட அனர்த்தங்களால் 2 இலட்சத்து 73 ஆயிரத்து 606 குடும்பங்களைச் சேர்ந்த 9 இலட்சத்து 98 ஆயிரத்து 918 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஆயிரத்து 275 பாதுகாப்பு மத்திய நிலையங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
இதில் 51,228 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 80 ஆயிரத்து 499 பேர் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.

நிவாரண விநியோகம், தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை கிளிநொச்சி – பன்னங்கண்டிப்பகுதியில் வட்டக்கச்சிக்கு செல்லும் பிரதான வீதியூடான போக்குவரத்திற்கு முழுமையான தடைப்பட்டுள்ளதாக மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.

பாதை முழுமையான சேதமடைந்தமையால் இத்தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அனர்த்த முகாமைத்துவ பிரிவும் இராணுவத்தினரும் இணைந்து பாதைக்கான தடையினை அமைத்துள்ளனர்.
அத்துடன், மறுஅறிவித்தல் வரை இப்பாதைக்கான தடை நடைமுறையிலிருக்கும் பொதுமக்கள் இவ் அறிவித்தலை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் இடைத்தங்கல் முகாம்களுக்கான அத்தியாவசிய பொருட்களை உடனடியாக விநியோகிக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
இதுவரை பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களின் அடிப்படையில் வெள்ள அனர்த்தம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 4781குடும்பங்களைச் சேர்ந்த 15049 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் 26 இடைத்தங்கல் முகாம்கள் செயற்பட்டுவருகின்றன.  இவற்றிலே தங்கியுள்ள பொதுமக்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் மாவட்ட தேசிய அனர்த்த நிவாரண சேவை நிலையத்தின் ஊடாக விநியோகிக்கும் நடவடிக்கைகள் துரிதமாக இடம்பெற்றுவருகின்றன. இதேவேளை கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் 3 இலட்சத்து 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் பதுளை மற்றும் கண்டி மாவட்டங்களில் அதிக உயிரிழப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
பதுளை மாவட்டத்தில் 71 பேரும் கண்டி மாவட்டத்தில் 66 பேரும் மாத்தளை மாவட்டத்தில் 20 பேரும் உயிரிழந்தனர்  இது தவிர மட்டக்களப்பு மாவட்டத்தில் 50 ஆயிரம் பேரும் திருகோணமலை மாவட்டத்தில் 54 ஆயிரம்‌‌‌ பேரும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 30 ஆயிரம் பேரும் மன்னாரில் 80 ஆயிரம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.