இலங்கையில் அடுத்த பத்தாண்டுக்குள் வேலையின்மை பிரச்சினை தீவிரம் அடையும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.
அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இலங்கை தொழிலாளர் பிரிவிற்குள் புதிதாக சுமார் ஒரு மில்லியன் பேர் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் அந்தக் காலப்பகுதியில் 300,000 புதிய வேலைகள் மட்டுமே உருவாக்கப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, வேலைவாய்ப்புகளை உருவாக்க தனியார் துறை வளர்ச்சியை ஊக்குவிப்பது அவசியம் என்று உலக வங்கியின் துணைத் தலைவர் ஜோஹன்னஸ் ஜூட் தெரிவித்துள்ளார்.
உலக வங்கியின் துணைத் தலைவரின் இலங்கைக்கான விஜயத்தின் பின்னர் உலக வங்கி வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
உலக வங்கி குழு தனியார் மூலதனத்தை ஈர்ப்பதற்கும், போட்டித்தன்மை மற்றும் சேவை வழங்கலை வலுப்படுத்துவதற்கும், நாடு முழுவதும் வேலை வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கும் அரசாங்கத்துடன் கூட்டாக இணைந்து செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக வங்கியின் துணைத் தலைவர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடனான தனது கலந்துரையாடலில், நெருக்கடி நிலையில் இருந்து மீண்டெழும் இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை பாராட்டியுள்ளார்.
மேலும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும், தனியார் முதலீட்டை ஈர்க்கும் மற்றும் முக்கிய துறைகளை நவீனமயமாக்கும் சீர்திருத்தங்களை செயல்படுத்துவதில் அரசாங்கத்திற்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளார்.