ஈரானிய கப்பல் விவகாரத்தில் பல்தரப்பு உறவுகளுக்கான அதன் அர்ப்பணிப்பு, நடுநிலைமை மற்றும் அமைதிக்கான கடப்பாடு என்பவற்றுக்கு மதிப்பளித்து, சர்வதேச பிரகடனங்களின் அடிப்படையில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் மனிதாபிமான உதவி குறித்த நிலைப்பாட்டை வரவேற்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
அமெரிக்க – இஸ்ரேலிய கூட்டு வான்வழித் தாக்குதலின் நீட்சியாக, ஈரான் கடற்படைக்குச் சொந்தமான போர்க்கப்பல் கடந்த புதன்கிழமை இலங்கையின் காலி நகருக்குத் தெற்கே சுமார் 40 கடல் மைல் தொலைவில் அமெரிக்க அணுசக்தி நீர்மூழ்கிக்கப்பல் நடத்திய தாக்குதல் மூலம் மூழ்கடிக்கப்பட்டது.
அதனையடுத்து இலங்கையிலும் பதற்ற சூழ்நிலையொன்று உருவான பின்னணியில், பாதுகாப்பு அச்சுறுத்தலைக் கருத்திற்கொண்டு ஈரான் கடற்படைக்குச் சொந்தமான மற்றொரு போர்க்கப்பலை கொழும்பு துறைமுகத்துக்கு வருவதற்கு வெளிவிவகார அமைச்சிடம் அனுமதி கோரியிருந்தது. அதற்கு கடந்த 5 ஆம் திகதி அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து, 6ஆம் திகதி குறித்த கப்பல் கொழும்பு துறைமுகத்துக்குக்குக் கொண்டுவரப்பட்டு, அதிலிருந்த 208 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதன் பின்னர், அக்கப்பல் திருகோணமலை துறைமுகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இவ்விடயத்தில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மார்க்-அன்ட்ரூ பிரான்சே (marc andre franche) பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
பல்தரப்பு உறவுகளுக்கான அதன் அர்ப்பணிப்பு, நடுநிலைமை மற்றும் அமைதிக்கான கடப்பாடு என்பவற்றுக்கு மதிப்பளித்து, ஐக்கிய நாடுகள் மற்றும் சர்வதேச பிரகடனங்களின் அடிப்படையில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் மனிதாபிமான உதவி குறித்த நிலைப்பாட்டை நாம் வரவேற்கிறோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.



