ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்ந்தும் நிலைநிறுத்தப்படும் : அமெரிக்கா

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையில் நல்லிணக்கம், நீதி, பொறுப்புகூறலை உறுதி செய்வதற்காக இலங்கையை நிகழ்ச்சி நிரலில் தொடர்ந்தும் நிலைநிறுத்துவதில் தாம் உறுதியாக இருப்பதாக அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

அத்துடன், தமிழ் மக்களுக்கான அதிகாரப்பகிர்வு உள்ளிட்ட எதிர்கால செயற்பாடுகளில் இந்தியாவுடன் கூட்டிணைந்த செயற்பாடுகளுக்கு நடவடிக்கைகளை தொடர்ந்தும் பரந்துபட்ட அளவில் முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அண்மையில் அமெரிக்காவின் சி.ஐ.ஏ. பிரதானி வில்லியம் பேர்ன் தலைமையிலான தேசிய பாதுகாப்பு குழுவினர் இலங்கைக்கு நேரில் விஜயம் செய்து குறிப்பிட்ட மணித்தியாலங்கள் தங்கியிருந்ததன் பின்னணியில் அமெரிக்க தேசிய பாதுகாப்புச் சபை உலகத் தமிழர் பேரவையின் பிரதிநிதிகளுடனான சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த அழைப்பினை ஏற்றுக்கொண்ட உலகத் தமிழர் பேரவையின் பிரதிநிதிகளான சுரேன் சுரேந்திரன் (பிரித்தானியா), கலாநிதி சோமா இளங்கோவன்(அமெரிக்கா), கலாநிதி எலியஸ் ஜெயராஜ்(அமெரிக்கா), கலாநிதி வாணி செல்வராஜ்(கனடா), கலாநிதி காருண்யன் அருளானந்தம்(அமெரிக்கா) உள்ளிட்டவர்கள் முக்கிய சந்திப்புக்களில் ஈடுபட்டனர்.

குறிப்பாக, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்காசிய விவகாரங்களுக்கான உதவிச்செயலாளர் டொனால்ட் லூ, உலகளாவிய குற்றவியல் நீதிக்கான துணைச் செயலாளர் அம்பெத் வான், தேசிய பாதுகாப்பு சபையின் இலங்கை,  நேபாளம் மற்றும் மாலைதீவு ஆகியவற்றுக்கான பணிப்பாளர், செனட் அலுவலகத்தின் வெளி விவகார குழுவின் சிரேஷ்ட பணிப்பாளர், உட்பட பல முக்கிய அதிகாரிகளுடன் சந்திப்புக்கள் நடைபெற்றிருந்தன.