இலங்கையை மீட்டெடுக்க நெருக்கமாக செயற்பட்டுவருவதாக ஐ.நா தெரிவிப்பு

டித்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீட்டெடுக்க இலங்கையர்கள் எடுக்கும் முயற்சியையும் அரசாங்கத்தின் முயற்சியையும் பாராட்டிய, இலங்கைக்கான ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே பிராஞ்ச்(Marc-André Franche), தாம் பாதிக்கப்பட்ட மக்களையும் இலங்கையையும் மீட்டெடுக்க இலங்கை அரசாங்கதுடன் நெருக்கமாக செயற்பட்டுவருவதாகவும் தெரிவித்துள்ளார்.

டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உயிர்காக்கும் உதவிகளை வழங்க 35.3 மில்லியன் அமெரிக்க டொலர் (இலங்கை ரூபாய் 10.9 பில்லியன்) நிதியை கோரி, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனிதநேய பங்காளிகள் இன்று வியாழக்கிழமை (11) ஒரு மனிதநேய முன்னுரிமைத் திட்டத்தை (HPP) ஆரம்பித்தனர். இந்தத் திட்டமானது 2025 டிசம்பர் மாதம் முதல் 2026 ஏப்ரல் மாதம் வரை அவசர உதவி தேவைப்படும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய 658,000 மக்களைச் சென்றடைவதில் கவனம் செலுத்துகிறது.

இந்த திட்டம் குறித்து உரையாற்றிய ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் (Marc-André Franche) மேலும் குறிப்பிடுகையில்,

இந்த மனிதநேய முன்னுரிமைத் திட்டம் (HPP), சூறாவளியினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் பகுதிகளுக்கு உதவி வழங்குவதன் மூலம் சர்வதேச உதவிக்கான அரசாங்கத்தின் கோரிக்கையைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் தேசிய முயற்சிகளுக்கு ஆதரவளிக்கிறது. கல்வி, உணவுப் பாதுகாப்பு, வேளாண்மை மற்றும் போசாக்கு, சுகாதாரம், பாதுகாப்பு, தங்குமிடங்கள், உணவு அல்லாத பொருட்கள் மற்றும் முகாம் ஒருங்கிணைப்பு, நீர், சுகாதார சுத்திகரிப்பு ஏற்பாடுகள் மற்றும் ஆரம்ப மீட்பு நடவடிக்கைகள் ஆகியவற்றில் உடனடி உயிர்காக்கும் உதவியை வழங்குகிறது.

முக்கியமான தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக விரைவாகவும் தேசிய அளவில் முன்னெடுக்கப்படும் முயற்சிகளை முழுமைப்படுத்தும் வகையிலும் உதவிகளை வழங்க மனிதநேய பங்காளிகள் எவ்வாறு ஒன்றிணைந்து செயற்படுகிறார்கள் என்பதை இது எடுத்துக் காட்டுகிறது.
இந்த திட்டத்தின் கீழான உதவிகள், இனங்காணப்பட்ட பாதிப்புகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்துடன் நிறைவுசெய்யப்பட்ட கூட்டு துரித தேவைகள் மதிப்பீட்டிலிருந்து கிடைத்த பெறுபேறுகளின் அடிப்படையில் வழிநடத்தப்படுகிறது. மேலும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குத் தேவையான ஒரு விரிவான பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
டித்வா சூறாவளி நாடளாவிய ரீதியில் பெரும் உயிர் இழப்புகளையும் பரவலான அழிவுகளையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் சுமார் 2.2 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இன்றுவரை 600 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் சுமார் 200 பேர் காணாமல் போயுமுள்ளனர். 91,000 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்து அல்லது முற்றாக அழிவடைந்துள்ளன.
சில குடும்பங்கள் தமது வீடுகளுக்கு திரும்பவும் அல்லது மாற்று தங்குமிடங்ககளைத் தேட தொடங்கியுள்ள நிலையில், 85,000 க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு நிலையங்களில் தங்கியிருப்பதாக தரவுகள் குறிப்பிடுகின்றன. தற்போது பெய்துவரும் பருவமழை தொடர்ந்தும் அபாய நிலையை ஏற்படுத்திவருவதுடன், நிலச்சரிவு எச்சரிக்கைகளைத் தூண்டியும் பலர் தமது இருப்பிடங்களுக்கு மீள்வதையும் தடுத்துவருகிறது.

டித்வா சூறாவளி வறுமை நிலையில் உள்ளவர்களையும் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களையும் கடுமையாக பாதித்துள்ளது. இது அவர்களின் வாழ்க்கையின் பெரும்பாலும் எல்லாவற்றையுமே பாதித்துள்ளது, அவர்கள் ஏற்கனவே அனுபவித்துவந்த சிரமங்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது, என்று ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் (Marc-André Franche) தெரிவித்தார்.

இந்த மனிதாபிமான முன்னுரிமைகள் திட்டமானது, ஆரம்ப மீட்பு முயற்சிகளுக்கு உதவும் அதே நேரத்தில், மிகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயிர்காக்கும் உதவிகளை வழங்குவதில் கவனம் செலுத்தும் அணுகுமுறையை வழங்குகிறது. இந்த முக்கியமான தருணத்தில் இலங்கைக்கு ஆதரவாக நிற்குமாறு சர்வதேச சமூகத்தை நாங்கள் கோருகிறோம். தொடர்ச்சியான ஒருமைப்பாடு வலுவான ஆதரவு மூலம் மட்டுமே குடும்பங்கள் தங்கள் வாழ்க்கையை கண்ணியத்துடனும் மீள்திறனுடனும் மீண்டும் கட்டியெழுப்ப எம்மால் உதவ முடியும்.

உடனடி அழிவுகளுக்கு அப்பால், இந்த சூறாவளியின் தாக்கமானது ஏற்கனவே பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருந்த பல குடும்பங்கள் மீது மேலும் கஷ்டங்களை ஏற்படுத்தியுள்ளது. வெள்ள நீர் மற்றும் சேதமடைந்துள்ள சுகாதார சுத்திகரிப்பு முறைமைகள் நீர் மற்றும் நோய்க்கிருமிகளால் தொற்றும் நோய்களின் அபாயத்தை அதிகரித்துள்ள அதே நேரத்தில், பல மாவட்டங்களில் சுகாதார சேவைகளுக்கான அணுகல் தடைபட்டுள்ளது.

பயிர் நிலங்கள் அழிவடைந்துள்ளமை, சந்தை சீர்குலைவுகள் மற்றும் வருமான குறைவுகள் காரணமாக உணவுப் பாதுகாப்பு பாதிக்கப்படுகிறது, இது ஏற்கனவே அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய போராடிவரும் குடும்பங்களுக்கு மேலும் ஆபத்துகளை அதிகரிப்பதாக அமைந்துள்ளது.

நெரிசலான தங்குமிடங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட வசதிகள் காரணமாக பாதுகாப்பு அபாயங்கள் குறிப்பாக பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளுக்கு பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறை ஏற்படக்கூடிய அபாயங்களும் அதிகரித்து வருகின்றன. சூறாவளியினால் பாதிக்கப்பட்டவர்களில் 462,000 சிறுவர்கள் உள்ளனர், அவர்களில் பலர் அத்தியாவசிய சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் இடையூறுகளை எதிர்கொள்கின்றனர்.
ஐக்கிய நாடுகள் மற்றும் மனிதநேய பங்காளிகள் அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் தேசிய அதிகார தரப்புகளுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருகின்றனர். இந்த அனர்த்தத்தின் தொடக்கத்திலிருந்தே, உணவு அல்லாத பொருட்கள், பாதுகாப்பான நீர் மற்றும் சுகாதார வசதிகள், மகப்பேறு மற்றும் கண்ணியப் பொதி (dignity kits) மற்றும் அவசர உணவுப் பொருட்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் பாதிக்கப்பட்ட சமூகங்களைச் சென்றடைந்து வருகின்றன.
இருதரப்பு பங்காளிகளிடமிருந்து கிடைத்த ஆரம்ப பங்களிப்புகள் மற்றும் ஐ.நா மத்திய அவசரகால நிவாரணத்தில் இருந்து (CERF) கிடைத்த 4.5 மில்லியன் டொலர்கள் துரித உதவிகளுக்கு கைகொடுத்த போதிலும், குறிப்பிடத்தக்க இடைவெளிகள் இருக்கவே செய்கின்றன. பதிலளிப்பு நடவடிக்கைக்கு முழுமையாக நிதியளிக்கவும், மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களைப் பாதுகாக்கவும் மேலதிக வளங்களுக்கான அவசரத் தேவையை மனிதநேய முன்னுரிமைத் திட்டம் (HPP) எடுத்துக் காட்டுகிறது.
உயிர்காக்கும் உதவிகள் மிகவும் தேவைப்படும் அனைவரையும் சென்றடைவதை உறுதிசெய்ய பங்களிக்க முன்வருமாறு சர்வதேச சமூகத்திடம் ஐக்கிய நாடுகள் அழைப்பு விடுக்கிறது. ஐக்கிய நாடுகள் அமைப்பு, மனிதநேய முன்னுரிமைகள் திட்டம் குறித்த விளக்க நிகழ்வொன்றினை, அபிவிருத்தி பங்காளிகள், சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பங்கேற்புடன் நடாத்தியது. இன் நிகழ்வில் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர், அனர்த்த முகாமைத்துவ நிலைய பணிப்பாளர் நாயகம் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் அவசரகால பிரிவின் பணிப்பாளர் நாயகம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
ஐக்கிய நாடுகள், இலங்கை அரசாங்கத்துடனும் மக்களுடனும் இணைந்து அனைவரையும் உள்ளடக்கும் வகையில் ஒரு பேண்தகு தன்மையான அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலைப் பின்பற்றுகிறது. கூட்டாகவும் அதன் சிறப்பு நிறுவனங்கள், நிதியங்கள், திட்டங்கள் மற்றும் அலுவலகங்கள் மூலமும், தரமான சமூக சேவைகளுக்கான சமமான அணுகல், வலுப்படுத்தப்பட்ட மனித திறன்கள், மனித உரிமைகள் மற்றும் சமூக ஒற்றுமை ஆகியவற்றுடன் நிலையான மற்றும் சமபங்கமைப்புடனான பொருளாதார வளர்ச்சியை அடைவதற்காக இலங்கை அரசாங்கத்திற்கு உதவ ஐக்கிய நாடுகள் முயற்சி செய்கின்றது.