வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் தொடர்பான ஐ.நா.வின் மீளாய்வு வெற்றிகரமாக நிறைவு: அரசாங்கம் தெரிவிப்பு

வலிந்து காணாமல் போவதைத் தடுக்கும் சர்வதேச உடன்படிக்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் குழுவின் இலங்கை தொடர்பான மீளாய்வு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

வலிந்து காணாமல் போனவர்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் 29ஆவது அமர்வு கடந்த 22 ஆம் திகதி ஆரம்பமாகியது. இந்த மாநாட்டில் இலங்கை சார்பில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உள்ளிட்ட குழுவினர் பங்கேற்றிருந்தனர்.

அதற்கமைய, இலங்கை தொடர்பான மதிப்பாய்வுகள் நேற்று (26) இடம்பெற்றிருந்தன.
இதன்போது, இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து தாம் தெளிவுபடுத்தியதாக , நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

அத்துடன், இந்த இலங்கை தொடர்பான மதிப்பாய்வு வெற்றிகரமாக நிறைவடைந்ததாகவும் அவர் கூறினார்.
இலங்கை தொடர்பாக சில எழுத்துபூர்வ கோரிக்கைகளும் விடுக்கப்பட்டதாகவும் அதனை நேற்றிரவு சமர்ப்பித்ததாகவும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். இதேவேளை, இந்த அமர்வில் பங்கேற்றிருந்த நீதி அமைச்சர் தலைமையிலான குழு இன்று (27) இலங்கைக்கு திரும்புகிறது.