ஐ.நா-வின் இலங்கை தொடர்பான தீர்மானம்: அரசாங்கம் நிராகரிப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்தை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

குறித்த தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்று ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி, அமர்வில் அறிவித்துள்ளார். எனினும், பிரித்தானியா உள்ளிட்ட ஏனைய நாடுகளின் ஆதரவுடன் சமர்ப்பிக்கப்பட்ட குறித்த பிரேரணையை வாக்கெடுப்புக்கு விடாது ஏற்றுக் கொள்வதாக, அவைத் தலைவர் தெரிவித்தார்.

அதன்படி, கனடா, மலாவி, மொண்டினீக்ரோ, வடக்கு மெசிடோனியா மற்றும் பிரித்தானியா ஆகியவற்றைக் கொண்ட குழுவால் கடந்த செப்டம்பர் 10ஆம் திகதி இலங்கை தொடர்பான பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.
அரசியல் அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கவும், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்தவும், இந்த அமைப்புகள் திறம்படச் செயல்படுவதை உறுதி செய்யவும், குறித்த பிரேரணையினூடாக இலங்கை அரசு கோரப்பட்டுள்ளது.

மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் என்பன குறித்து பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகளின் முழு பங்கேற்புடன் முழுமையானதும் பாரபட்சமற்றதுமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பது இந்தத் தீர்மானத்தின் மிக முக்கிய கோரிக்கையாகும்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்க நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும் என்றும் அந்த பிரேரணையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் உறுதிமொழிகளை பிரித்தானியா பாராட்டியதுடன், வாக்குறுதிகளை உறுதியான நடவடிக்கைகளாக மாற்றவும் வேண்டும் என தெரிவித்தது. அத்துடன், மனித புதைகுழிகளைத் தோண்டி எடுத்தல், சுயாதீனமான வழக்குத் தொடுப்பு வழிமுறைகள் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்களைக் கண்காணிப்பதை முடிவுக்குக் கொண்டுவருதல் ஆகியவற்றின் அவசியத்தைக் குறித்த பிரேரணை வலியுறுத்தியுள்ளது.

இந்தநிலையில், இலங்கையின் மனித உரிமைகள் முன்னேற்றத்தையும், பொருளாதார மீட்சியையும் சீனப் பிரதிநிதி இதன்போது பாராட்டினார். இலங்கையின் இறையாண்மை மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மைக்கான ஆதரவை மீண்டும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார். எனினும், கொரிய குடியரசு மற்றும் ஜப்பான் என்பன அரசாங்கத்தின் சீர்திருத்த முயற்சிகளை வரவேற்று, ஒருமித்த கருத்துடன் தீர்மானம் நிறைவேற்றப்படுவதை ஆதரித்தன.

இந்தநிலையில், எத்தியோப்பியாவும், கியூபாவும் இலங்கைக்கு எதிரான வெளிப்புற ஆணையை எதிர்த்தன.
இலங்கையின் தேசிய இறையாண்மையை மதிக்க வேண்டும் என அந்த நாடுகள் கூறியுள்ளதுடன், அதில் தலையிட வேண்டாம் என்றும் வலியுறுத்தின.  குறித்த தீர்மானமானது, உண்மையான உள்நாட்டு நல்லிணக்க முயற்சிகளுக்கு எதிர்மறையானது என அந்த நாடுகளின் பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.