ஐக்கிய நாடுகள் சபையின் கொடியுடன் கூடிய நவீன கடல் ஆராய்ச்சி கப்பலான R/V Dr. Fridtjof Nansen இன்று (11) கொழும்பை வந்தடைந்தடையவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையின் பிரத்யேகப் பொருளாதார வலயத்தில் பாரிய கடல் சார் ஆய்வுகளை மேற்கொள்வதற்காகவே இந்த கப்பல் வருகை தரவுள்ளது.
இலங்கையின் அழைப்பை ஏற்று, ஐ.நா. உணவு மற்றும் விவசாய அமைப்பு, இலங்கை மீன்பிடி அமைச்சு மற்றும் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவர் நிலையம் ஆகியவற்றுடன் இணைந்து இந்த 32 நாள் ஆய்வை முன்னெடுக்கின்றது.
இந்த ஆராய்ச்சிப் பயணம் இலங்கையின் கடல் வளங்கள் மற்றும் சூழல்தொகுதிகள் தொடர்பில் மிக முக்கியமான தரவுகளைச் சேகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஹைட்ரோ-அகௌஸ்டிக் (Hydro-acoustic) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கடல் மட்டத்திற்குக் கீழே உள்ள மீன்களின் அளவு மற்றும் அவை பரவியுள்ள இடங்கள் கணக்கிடப்படும்.
கடலில் கலந்துள்ள பிளாஸ்டிக் மற்றும் ஏனைய இரசாயனக் கழிவுகள் தொடர்பில் ஆய்வுகள் முன்னெடுக்கப்படும். கடல் வாழ் உயிரினங்களின் பல்லுயிர்த்தன்மை மற்றும் அரிதான இனங்கள் குறித்துக் கண்காணிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச காலநிலை மாற்றம் இலங்கையைச் சூழவுள்ள கடல் சூழலை எவ்வாறு பாதித்துள்ளது என்பது தொடர்பிலும் ஆராயப்படும். இந்த ஆய்வின் மூலம் கிடைக்கும் தரவுகள், இலங்கையின் நிலையான மீன்பிடி முகாமைத்துவம் மற்றும் கடல்சார் கொள்கைகளை வகுக்க பெரும் உதவியாக அமையும்.
அத்துடன், நாரா நிறுவனத்தின் இளம் விஞ்ஞானிகளுக்குச் சர்வதேச நிபுணர்களுடன் இணைந்து பணியாற்றும் மற்றும் நவீன தொழில்நுட்பங்களைக் கற்கும் வாய்ப்பும் வழங்கப்படவுள்ளது.



