ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் இன்று (24) ஆரம்பமாகியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தலைவர் ஜூர்க் லோபர் தலைமையில் ஆரம்பமான இந்த கூட்டத்தொடரில் அந்த சபையின் பொதுச் செயலாளர் என்டோனியோ குட்டேரஸ் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
கூட்டத்தொடரின் ஆரம்பத்தில் உரையாற்றிய ஜூர்க் லோபர் தனிமனித அடிப்படை சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன் சர்வதேச சட்டத்தையும் நடைமுறையையும் நினைவுபடுத்தியிருந்தார்.
கடந்த 80 வருட காலமாக மனித உரிமைகளை நிலைநாட்டும் செயற்பாட்டை முன்னெடுத்து வருவதாகவும், எனினும் உலகளாவிய ரீதியில் மனித உரிமைகளுக்கு எதிரான செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த கூட்டத்தில் பங்குபற்றுவதற்காக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான உயர்மட்டக் குழு நேற்று (23) ஜெனீவாவுக்கு பயணமானது. இந்தக் குழுவினர் எதிர்வரும் 28 ஆம் திகதிவரை மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகளில் பங்குபற்றவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனிடையே, அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான உயர்மட்ட குழுவினர் நட்பு நாடுகளுடனான பிரதிநிதிகளுடன் உயர்மட்ட கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கும் திட்டமிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அதேநேரம், மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர்பான வரைவினை கடுமையாக எதிர்ப்பதற்கும், பேரவையின் 51/1 பிரேரணையை இலங்கை தொடர்ந்து எதிர்ப்பதற்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


