இலங்கையில் உணவுப்பாதுகாப்பின்மை தொடர்வதாக ஐநா கவலை

உணவுப்பாதுகாப்பின்மை அச்சுறுத்தலிற்குள்ளாகியுள்ள வாழ்வாதாரம், முக்கியமான அத்தியாவசியமான மருந்துகளிற்கு பற்றாக்குறை ,அதிகரித்து வரும் பாதுகாப்பு கவலை போன்ற பல பரிமாண நெருக்கடியை இலங்கை எதிர்கொள்கின்றது என மனிதாபிமான விவகாரங்களைஒருங்கிணைப்பதற்கான ஐநாவின் அலுவலகத்தின் ஆசிய பசுபிக்கிற்கான பிராந்திய அலுவலகம்தெரிவித்துள்ளது.

விவசாய விளைச்சலில் வீழ்ச்சி இந்த நிலைமையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது என ஐநா அலுவலகம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் பயிர்ச்செய்கை காலத்தில் மிகவும் குறைவான விளைச்சலே கிடைக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது இதனுடன் ஒக்டோபரில் உணவு பணவீக்கம் 85.6 வீதமாக காணப்படுவதால் சனத்தொகையில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையானவர்கள் தொடர்ந்தும் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்வதில் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர் என ஐநாவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

உணவுப்பாதுகாப்பு நெருக்கடி தொடர்ந்தும் பிரச்சினைக்குரியதாக காணப்படுகின்றது பத்தில் மூன்று குடும்பங்கள் போதுமான உணவை உண்ணவில்லை எனவும் ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது.