ஐ.நா. தீர்மானம் தொடர்பில் பாராளுமன்ற விவாதம் நடத்த இணக்கம்!

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணை தொடர்பில் சபையில் விவாதம் நடத்துவதற்கு ஆளுங்கட்சி இணங்கியுள்ளது.

ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம், இலங்கை அரசாங்கம் ஏன் வாக்கெடுப்பு கோரவில்லை, உள்ளக பொறிமுறையை வலுப்படுத்துவதற்குரிய திட்டங்கள் எவை என்பன உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் விசேட உரையாற்றினார்.
அவரின் உரையின் பின்னர் இது சம்பந்தமாக பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த இடமளிக்கப்பட வேண்டும் என்று எதிரணி பிரதம அமைப்பாளர் கோரிக்கை விடுத்தார்.

அதற்கு ஆளுங்கட்சி இணங்குகின்றது என்று வெளிவிவகார அமைச்சர் பதிலளித்தார்.
இதேவேளை, ஜெனிவா விவகாரத்தை வைத்து ஒருபோதும் அரசியல் செய்யப்போவதில்லை என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையும், அங்கு மேற்கொள்ளப்படும் தீர்மானங்களும் அரசியல் இருப்புக்காகவே கடந்த காலங்களில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. ‘அவ்வாறான செயற்பாடுகளில் நாங்கள் ஒருபோதும் ஈடுபடப் போவதில்லை.  அதுபோல், அத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு எவரையும் அனுமதிக்கவும் மாட்டோம்’ என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளிவிவகார அமைச்சர் தெளிவுபடுத்திவிட்டார்.

ஜெனிவா தீர்மானத்துடன் உடன்படவில்லை என்று திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நிலைப்பாட்டில் எப்போதும் மாற்றங்களைச் செய்ய போவதில்லை என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.