பலஸ்தீனத்தை அரசாகப் பிரித்தானியா அங்கீகரித்துள்ள வரலாற்று மாற்றம் 1933ம் ஆண்டின் ‘மொந்தவீடியோ மரபின் விளைவு திறன் வரைகூறான (Montevideo effectiveness criteria)’ ‘தெளிவாக வரையறுக்கப்பட்ட எல்லைக ளும், நிலையான மக்கள் தொகையும், ஒருமை யாகச் செயற்படும் அரசாங்கமும் இருந்தாலேயே அதனை அரசாக அங்கீகரிக்கலாம் என்ற நிபந்தனையை மீறியுள்ளது. இதனை பிரித்தானியாவின் ஆங்கில நாளிதழான ‘த கார்டியன்;’ உடைய ராஜதந்திர பத்திரிகாசிரியரான பற்றிக் வின்ரூர் தனது 18.09.2025ம் திகதிய யூ.கே. வெள்ளிக்கிழமைக்குள் பலஸ்தீனிய அரசை அங்கீகரிக்க ஆயத்தமாகிறது’ என்ற ‘த கார்டியன்’ கட்டுரையில் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் இந்த ‘மொந்தவீடியோ மரபு’ மீறல் உலகின் சமகாலப் பிரச்சினையாக உள்ள ஈழத்தமிழரின் இறைமையும் தன்னாட்சியும் பிரித்தானியாவால் இதே அடிப்படையில் அங்கீகரிக்கப்பட வேண்டிய தார்மீகநிலையை பிரித்தானியாவுக்கு ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோண்சன் பலஸ்தீனப் பிரச்சினை குறித்த தனது அவர் பிரதமராக இருந்த காலத்துக் கருத்துப்பரிமாற்றமொன்றில் பிரித்தானியா பலஸ்தீனத்திலும் இலங்கையிலும் வெவ்வேறான இருதேசங்களை ஒன்றாக்கி ஆட்சிபுரிந்தனர் என குறிப்பிட்டமை நினைவுக்கு வருகின்றது. இப்போது பலஸ்தீனிய தேசத்தைப் பிரித்தானியா அங்கீகரிக்கப்பதன் மூலம் பலஸ்தீனியர்கள் இஸ்ரேயலால் 77 ஆண்டுகள் இனஅழிப்புறும் நிலைக்குப் பாதுகாப்பை பிரித்தானியாவின் இன்றைய பிரதமர் கியர் ஸ்ராமர் வழங்குகிறார். அதே போல அவர் 04.02.1948 முதல் இன்று வரை 77 ஆண்டுகள் பிரித்தானிய காலனித்துவம் உருவாக்கிய சிங்களப் பெரும்பான்மை ஒற்றையாட்சி முறைமைக்குள் பிரித்தானியாவிடம் இருந்த தங்களின் யாழ்ப்பாண வன்னி அரசுக்களின் இறைமையைச் சிங்களவர்களின் இறைமையுடன் இணைத்த பிரித்தானியாவின் காலனித்துவ ஆட்சிக்காலத் தவறால் தொடர்ச்சியாக இனஅழிப்புக்கு உள்ளாகி வரும் ஈழத்தமிழர்களையும் அவர்களின் ஈழத்தமிழர் தாயகத்தை அங்கீகரிப்பதன் மூலம் உடன் பாதுகாக்க வேண்டும் என்று இன்று பிரித்தானியாவின் குடிகளாக உள்ள ஈழத்தமிழர்கள் ஒருமைப்பாட்டுடன் வலியுறுத்த வேண்டும் என்பது இலக்கின் இவ்வார எண்ணமாக உள்ளது.
1995இல் தென்னாபிரிக்கா முதன்முதலில் பலஸ்தீனிய அரசை அங்கீகரித்ததின் பின்னர் 2010இல் பிரேசிலும் 2011இல் சிலியும் 2012இல் தாய்லாந்தும் 2025இல் ஸ்பெயினும் பலஸ்தீனியத்தை அங்கீகரித்ததின் பின்னரே 2025இல் 10 ஐரோப்பிய நாடுகள் பலஸ்தீனியத்தை அங்கீகரிக்கும் நிலை உருவானது. இதனை ஏன் குறிப்பிட வேண்டியுள்ளதென்றால் எவ்வாறு பலஸ்தீனியர்கள் உலகின் எல்லாநாடுகளுடனும் தங்கள் உரையாடல்களை நடாத்தி இந்த நிலைக்கு வந்தனர் என்பதை ஈழத்தமிழர்கள் கவனத்தில் எடுத்தல் வேண்டும். ஈழத்தமிழர்கள் ஒருசில நாடுகளுடன் மட்டும் அதுவும் திட்டமிட்ட முறையில் இல்லாது மனம்போன போக்கிலேயே தங்கள் உரையாடல்களை முன்னெடுக்க முயற்சிப்பதே ஈழத்தமிழர்களால் உலகளாவிய மக்கள் ஆதரவை பலஸ்தீனியர்களை விட மோசமாகப் பல இனஅழிப்பு இனத்துடைப்பு பண்பாட்டு இனஅழிப்பைச் சந்தித்த நிலையிலும் இன்று வரை பெற இயலாதுள்ளமைக்குக் உள்ளமைக்குக் காரணமாகிறது. இன்றும் பலஸ்தீனிய மக்களுக்காக பலஸ்தீனியர் அல்லாத உலக மக்களே எங்கும் சிறைக்குப் போவதைக் கூடப் பொருப்படுத்தாது போராடுவதைக் காண்கின்றோம். ஆனால் ஈழத்தமிழர்களைப் பொறுத்த வரை தேசிய விடுதலைப்போராட்டத்தையும், கட்சிகளும் அமைப்புக்களும் இயக்கங்களும் எல்லா மக்களுக்கும் உரியதாகக் கருதாது முற்றுரிமை கொண்டாடுகின்ற போக்கு அரசியல் வழக்கமாகப் பழக்கமாகியுள்ளதால் அவர்களுடைய முயற்சிகள் வெறும் பரப்புரைகளாகவே உலகின் ஊடகங்களால் பார்க்கப்படும் போக்கும் காணப்படுகிறது.
கடந்த வாரத்தில் தியாகி திலீபனின் நினைவேந்தலுக்குச் சென்ற தேசிய மக்கள் சக்தியின் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரை “திலீபன் வழியில் வருகின்றோம்” என தியாகி திலீபனின் திருவுருவ ஊர்தியைத் தமிழர் தாயகப் பகுதிகளில் முன்னெடுக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் தாமே முற்றுரிமை கொண்டாடி அவரைத் தடுத்த செயல் குறித்துத் தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த போராளியும் தியாகி திலீபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த பொழுது அருகிருந்தவருமான பசீர் காக்கா என அழைக்கப்படும் மு.மனோகர் அவர்கள் யாழ்ப்பாண ஊடக மையத்தில் செய்தியாளர் சந்திப்பில் “தியாக தீபம் திலீபனின் ஈகத்தின் பெறுமதியையோ தமிழ்த்தேசியம் என்ற விடயத்தையோ விளங்கிக் கொள்ளாமல் அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ் கட்சியினர் கோமாளிக்கூத்துகளை நடாத்துவதையும், எமது போராட்டத்தைப் புரிந்து கொள்ளாமல் ஒட்டுமொத்த தமிழினத்தையும் தலைகுனியும் வகையில் தெருச்சண்டியர்கள் போல் நடந்து கொள்வதையும் சகிக்க முடியாதுள்ளது. மாற்றுக் கருத்துடையோருக்கு அஞ்சலி செலுத்துவதும் இறுதிச்சடங்கு போன்றவற்றில் கலந்து கொள்வதும் ஒரு நாகரிக சமூகத்தில் நடக்கும் விடயங்களே. எல்லாவற்றையும் 13வது திருத்தத்தை ஏற்றோர் எதிர்ப்போர் என்ற வாய்ப்பாட்டில் துரோகி-தியாகி என வகைப்படுத்தும் புதியதோர் ஒழுங்கைக் கொண்டு வரத்துடிக்கின்றனர். வட கிழக்குக்கு அப்பால் உள்ள எமது உறவுகள், தென்னிலங்கையிலுள்ள நடுநிலையானோர் எமது போராட்டத்தையும், திலீபனின் தியாக வரலாற்றையும் அறிய விடாமல் திரைபோட முனைவது சிறுபிள்ளைத்தனமானது. முன்பு திலீபனின் நினைவேந்தலில்; தியாக தீபம் திலீபனின் திருவுருவத்துக்குத் மாலை சூட்ட வரிசையில் நின்ற என்னை பிறகு மாலை போடுங்கள் எனத் திருப்பியனுப்ப முனைந்தார்.
உடனே அங்கே வந்த சனநாயகப் போராளி அமைப்பினர் என்னைக் கூட்டிச் சென்று மாலை போட உதவினர். அன்று என்னை தடுத்தவர்தான் இப்போது திலீபனுக்கு அஞ்சலி செலுத்த வந்த சந்திரசேகரிடம் தமது எதிர்ப்பை வெளியிட ஆரம்பித்து எங்களை நாகரிகமற்ற மக்கள் கூட்டமாக வெளிப்படுத்த முனைந்தனர்.” எனக் கூறியுள்ளார். மூத்த போராளி ஒருவரின் இந்தக் கூற்று ஈழத்தமிழர்களில் சிலரின் எல்லாவற்றையும் முற்றுரிமை கொண்டாடும் போக்குதான் ஈழத்தமிழரின் தேசிய ஒருமைப்பாட்டுக்கான மிகப்பெரிய தடையாக இன்று ஈழத்தமிழரின் அரசியல் உலகில் உள்ளது என்பதைத் தெளிவுபடுத்துகிறது. மேலும் கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட அமெரிக்காவின் முன்னாள் துணை அரசத்தலைவர் கமலா ஹரிஸ் அவர்கள் தான் அரசத்தலைவர் தேர்தலுக்குப் பரப்புரை செய்த நாட்களின் அனுபவத்தை “107 நாட்கள்” என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டுள்ளார். இந்த நூல் சொந்தக் கட்சிக்குள்ளேயே ஒருவர் பெண் என்ற நிலையில் அனுபவித்த வேதனைகளை மட்டுமல்லாது சொந்தக் கட்சிக்காரரே எவ்வாறு ஒருவரின் வெற்றிக்கு எதிர்வினையாற்றுவர்கள் என்பதைத் தெளிவாக்கியுள்ளது. ஈழத்தமிழர்கள் இதனை வாங்கிப்படித்தால் தாங்களும் இதற்கு விதிவிலக்கல்ல என்பதைப் புரிந்து கொள்ளலாம். அவர் ஒரு இடத்தில் தன்னுடைய இனநிலையை ட்ரம்ப் தாக்கு பொருளாக்கிய பொழுது தான் அமைதியாக இருந்தமைக்குக் காரணம் அதற்குப் பதிலளித்திருந்தால் ட்ரம்ப் நீ பெண்ணல்ல என்றால் அதனை நிரூபிக்க நான் பெண்ணுறுப்பைக் காட்சிப்படுத்த வேண்டி வந்திருக்கும் என்று கிண்டலாக எழுதியுள்ளார். இத்தகைய மனப்போக்கில்தான் ஈழத்தமிழர்கள் பலரும் இன்று முற்றுரிமை கொண்டாடுபவர்களுக்கு பதிலளிக்காமல் இருக்கின்றார்கள்.
பிரித்தானிய பிரதமரும் அமெரிக்க அரச அதிபரும் செக்கர்ஸ் எஸ்டேட்டில் செய்தியாளர்களுடன் உரையாடிய பொழுது “புதிய சகாப்தம் – புதிய தலைமைத்துவம் தேவை” என்ற உண்மையை உலகுக்குத் தெளிவாக்கினர். அந்நேரத்தில் பிரித்தானியப் பிரதமர் தான் பலஸ்தீனிய விடயத்தில் அமெரிக்காவுடன் முரண்படுவதாகவும் இருதேச முறைமையை பிரித்தானியா நடைமுறைப்படுத்த முனையும் என்று கூறி விட்டு ஆனால் பயங்கரவாத இயக்கமான ஹமாஸ் ஆட்சியில் எந்தப் பங்கையும் வகிக்க பிரித்தானியா அனுமதிக்க மாட்டாது எனவும் தெளிவாகக் கூறினார். இந்நிலையில் உலகில் பயங்கரவாத இயக்கங்கள் எனப் பட்டியிலிடப்பட்ட இயக்கங்கள் தங்களை மீளவும் உலக முறைமைக்குள் கொண்டு வருவதற்கான செயற்பாடுகளில் ஈடுபடுவது இன்றைய காலத்தின் தேவை என்பது இவர்களுடைய உரையில் தெளிவாக்கப்பட்டுள்ளமை முக்கியமான விடயம். அத்துடன் இன்று பிரித்தானிய அமெரிக்க உறவு தனியான விசேடமானது என பிரித்தானிய அரசரும் அமெரிக்க அரசத்தலைவரும் பிரகடனப்படுத்திய பொழுது அது 250 பில்லியன் டொலர் பெறுமதியான “டெக்” வளர்ச்சியின் மூலமே அந்நிலை ஏற்படுகிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டியுள்ளது. இவ்விடத்தில் டெக் என்பது சமகாலத்தில் வேகமாகப் பரவும் செயற்கை நுண்ணறிவு வழியான தொழில்துறைக்கு வர்த்தகத்துக்கு சமூக வாழ்வுக்கு உதவக்கூடிய முறைமையைத் தளத்தை உருவாக்கும் கம்பெனிகளையே குறிக்கிறது. இதனால் இன்றைய உலகு பில்லியன் மில்லியன் முதலீட்டாளர்களின் உச்ச இலாபத்தையே சமூக பொருளாதார அரசியல் ஆன்மிக வளர்ச்சியாக முன்னெடுக்கிறது என்ற வகையில் இதற்கு ஏற்ப செயற்பட வேண்டிய பொறுப்பு ஈழத்தமிழர்களுக்கு உள்ளதென்பதாலேயே இலக்கு செயலணிகளை அமைத்து செயற்படுவதற்கான அழைப்பை பலமாக எழுப்புகிறது. அத்துடன் இருவரிடையான நேரடி உடன்படிக்கை வழியாகவே இவை நடைமுறைச் சாத்தியமாகும் என்பதையும் அமெரிக்க பிரித்தானிய தலைவர்களின் சந்திப்பு உறுதியாக்கியுள்ள நேரத்தில் ஒவ்வொரு துறையினரையும் இணைக்கும் பலம் பொருந்திய டெக் ஹப் காலத்தின் தேவை என்பதை இலக்கு வலியுறுத்திக் கூற விரும்புகிறது.
ஆசிரியர்