அமெரிக்காவினால் இலங்கையுடனான வர்த்தகம் பாதிப்பு: ரஷ்யா தெரிவிப்பு

அமெரிக்காவின் தடைகள் காரணமாக ரஷ்யா – இலங்கை இருதரப்பு வர்த்தகம் மற்றும் சுற்றுலாவின் முழு திறன் என்பவற்றை உணர முடியாது என்று இலங்கைக்கான ரஷ்ய தூதர் லெவன் ஜாகார்யன் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள தடைகள் காரணமாக இலங்கையில் மின்னணு பரிவர்த்தனைகள் சாத்தியமற்றது. இதனால், ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் கையில் பணத்தை எடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனியார் அமைப்பொன்று ஏற்பாடு செய்திருந்த வட்டமேசை கலந்துரையாடலின் போது அவர் இதனை வெளிப்படுத்தியுள்ளார். எவ்வாறாயினும், ​​ரஷ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையே நேரடி விமான நடவடிக்கைகள் அடுத்த மாதம் மீண்டும் தொடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யா தற்போது மாலைத்தீவுடன் நேரடி விமான  சேவைகளை முன்னெடுத்துள்ளது. அடுத்து வியட்நாமுக்கு நேரடி விமான சேவைகளை முன்னெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், தடைகள் நீக்கப்பட்டால் இருதரப்பு வர்த்தகத்தின் சாத்தியக்கூறுகள் எவ்வளவு பெரியதாக இருக்கும் என்று கேள்வியெழுப்பிய போது, ரஷ்யா-யுக்ரைன் போர் முடிந்த பின்னரே அதை காண முடியும் என தூதுவர் பதிலளித்தார்.

“போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ரஷ்ய தரப்பின் ஒரு முக்கிய நிபந்தனை தடைகளை நீக்குவதாகும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்யாவிலிருந்து சுற்றுலாப் பயணிகளின் வருகை பல ஆண்டுகளாக அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட ரஷ்யர்கள் இலங்கை வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இலங்கை பிரிக்ஸ் அமைப்பில் இணைவதை ரஷ்யா வரவேற்பதாக தூதுவர் வலியுறுத்தினார்.
எவ்வாறாயினும், கடந்த பிரிக்ஸ்  உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளுமாறு விடுத்த அழைப்பை இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஏற்காதது குறித்து கருத்து தெரிவிப்பதைத் தூதுவர் தவிர்த்திருந்தார்.
அழைப்பிதழை தாம் ஒப்படைத்ததாகவும், ஆனால் அதை ஏற்றுக்கொள்வதும் ஏற்காததும் இலங்கையின் இறையாண்மை முடிவு என்றும் ரஷ்ய தூதுவர் இதன்போது தெரிவித்துள்ளார்.